விக்ரமின் சியான் 63 படப்பிடிப்பு துவக்கம்! | Chiyaan 63 | Vikram | Anand Shankar
விக்ரம் நடிப்பில் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிறது `Chiyaan 63' படம். இப்படத்தின் அறிவிப்பு, விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல் 17ஆம் தேதி வெளியானது. சத்ய ஜோதி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் வீடியோ புரோமோ ஒன்றும் வெளியிடப்பட்டது. ’இருமுகன்’ படத்திற்கு அடுத்து இரண்டாவது முறையாக இப்படத்தில் இணைந்துள்ளது விக்ரம் - ஆனந்த் ஷங்கர் கூட்டணி.
இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது என அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி. இந்தப் படத்தில் தயாரிப்பாளர் ஷிபு தமீம்ஸின் மகளும், `வீர தீர சூரன்' படத் தயாரிப்பாளருமான ரியா ஷிபு ஒரு பாத்திரத்தில் நடிக்கிறார். ரியா ஏற்கெனவே நிவின் பாலியுடன் நடித்த `சர்வம் மாயா' படத்தில் டெலுலு பாத்திரத்தில் நடித்துப் பிரபலமானவர். அதற்கு முன்பு, இன்ஸ்ட்டாவில் இவருக்கு என பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. இவர் தீவிர விக்ரம் ரசிகை என்பதும் கூடுதல் தகவல்.
முதலில் இப்படத்தின் ஷூட்டிங் மே முதல் வாரத்தில் துவங்கும் எனச் சொல்லப்பட்டது. இப்போது இன்றுமுதல் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. பரபரப்பாக முழுப் படத்தின் ஷூட்டிங்கும் சென்னையில்தான் நடைபெற உள்ளதாம். தொடர்ந்து 50 நாட்களுக்கு மேல் விக்ரம் தேதிகள் ஒதுக்கிக் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். விக்ரம் நடித்து கடைசியாக வெளியான `வீர தீர சூரன்' படம் வந்து ஓராண்டு ஆகிவிட்டது. விக்ரமின் அடுத்த படம் எதுவும் துவங்காமல் இருந்த நிலையில் ஒருவழியாகத் துவங்கிவிட்டது.

