Bison
BisonMari Selvaraj

"துருவை உன்னுடைய பையனா நினைச்சுக்கோ மாரினு விக்ரம் சார் சொன்னார்!" - மாரி செல்வராஜ் | Mari Selvaraj

ஒரு கருத்துரையாடலை முன்னெடுக்க வேண்டும் என விரும்பினேன். என் ஊருக்காக நான் என்ன செய்தேன் என்ற கேள்விக்கான பதில் தான் பைசன்.
Published on

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ், அனுபமா, ரஜிஷா, பசுபதி எனப் பலரும் நடித்து உருவாகி இருக்கிறது `பைசன்'. தீபாவளி வெளியீடாக அக்டோபர் 17ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இதன் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் இயக்குநர் மாரி செல்வராஜ் பேசும் போது "இந்த பைசன் திரைப்படம் உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்தது மனத்தி கணேசன் தான். இவரை சிறுவயதிலிருந்து பார்த்து வளர்ந்தவன் நான். என்னுடைய ஹீரோவாக இருந்தவர். கபடி விளையாட்டுக்காக, இவருக்காக போஸ்டர் எல்லாம் ஒட்டியிருக்கிறேன். அவருடைய கதையையே படமாக எடுப்பேன் என நினைக்கவே இல்லை.

உங்களின் கதையை மூலமாக வைத்துக் கொண்டு, இளைஞர்களுக்கு நான் ஒரு கதை சொல்லப் போகிறேன் என அனுமதி கேட்டபோது, என்னை நம்பி அதற்கான ஒத்துழைப்பை இதுவரைக் கொடுத்துக் கொண்டிருப்பவர் மனத்தி கணேசன். உழைப்பு, நேர்மை எனப் பல போராட்டங்களைக் கடந்து உயரத்துக்கு வந்தவர்களையும், பல இளைஞர்களின் கதையையும் என் ஸ்டைலில், என்னுடைய அரசியல் பார்வையில் நான் இப்படத்தில் சொல்லியிருக்கிறேன்.இப்படத்தை பா. ரஞ்சித் உள்ளிட்ட என் நண்பர்கள் பலர் பார்த்துவிட்டு என்னை பாராட்டினார்கள். இருந்தாலும், மனத்தி கணேசன் அவர்கள் இப்படத்தைப் பார்த்துவிட்டு என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தது தான் எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணமாக இருந்தது.

பரியேறும் பெருமாள் பார்த்துவிட்டு ஒரு மழைநாளில் லவ் யூ என செசேஜ் அனுப்பினீர்கள் ரஞ்சித் அண்ணா. மீண்டும் நீலத்துடன் இணைந்து படம் செய்ய வேண்டும் என்பது தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இந்தப் படத்தை பண்ணலாம் என்ற போது வேறு படம் பண்ணலாம் என நானே சொன்னேன். இதன் பட்ஜெட் காரணமாக நமக்கு சண்டை கூட வர வாய்ப்பிருக்கிறது என சொன்னேன். ஆனால் இந்தப் படத்தை இப்போது தான் பண்ண வேண்டும் என சொன்னீர்கள்.

Bison
BisonMari Selvaraj

என் வாழ்க்கையில் நிறைய பயணித்து 20 வருடங்களை கடந்திருக்கிறேன். இன்றும் என்ன உங்க ஊர் இப்பிடி இருக்கு எனக் கேட்பார்கள். ஒவ்வொரு முறை திருநெல்வேலிக்கு செல்ல வேண்டும் என்றால் மனதில் ஒருபாரம் ஏறும். நண்பர்களுடன் உரையாடும்போது, அங்கிருந்து செய்திகள் வரும்போதெல்லாம் அந்தச் சூழல் பதற்றமாக இருக்கும். எனவே, இதை மாற்ற வேண்டும், ஒரு கருத்துரையாடலை முன்னெடுக்க வேண்டும் என விரும்பினேன். என் ஊருக்காக நான் என்ன செய்தேன் என்ற கேள்விக்கான பதில் தான் பைசன்.

தென் மாவட்டத்தில் வெற்றி பெற்ற மற்றும் வெற்றி பெற முடியாத இளைஞர்கள் பற்றிய கதை. திரைத்துறையில் நான் பெற்ற வெற்றிக்குப் பிறகு என் ஊருக்காகவும், என் மாவட்ட, தென் தமிழகத்துக்காக நான் செய்திருக்கும் கதை. என்னுடைய உச்சபட்ச எமோஷ்னலும் கர்வமும் இந்தப் படம். இந்தப் படம் வெற்றிப்பெற்றது என்பதைத் தாண்டி, தமிழ் சமூகம் இத்திரைப்படத்தை எப்படி எடுத்துக் கொள்கிறது, என்ன கலந்துரையாடுகிறது என்பதைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன்.

மாரி செல்வராஜ் என்ற ஒருவனின் அரசியல் புரிதலுக்கும், என் பார்வைக்கும் முழுக் காரணம் ராம் சார். என்னுடைய பெரும் பலம். இந்தப் படம் என்னுடைய பெஸ்ட் எனப் பாராட்டினார். என்னுடைய இத்தனை வருட சினிமா பயணத்தில் நான் கற்றுக் கொண்ட கலைகளை எல்லாம் இப்படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறேன்.

பைசன் தீபாவளிக்கு வரும் என நான் நினைத்தே பார்க்கவில்லை. நான் இதற்கு முன்பு தீபாவளி பண்டிகையை கொண்டாடியதே இல்லை. "பாலிய நண்பனின் மரண நினைவை போல கடந்து போகிறது தீபாவளி " எனக் கவிதையை கூட எழுதி இருந்தேன். ஆனால், இப்பொழுது இந்த பைசன் திரைப்படத்திற்காக நான் முதன் முதலாக என் குடும்பத்தினருடனும், குழந்தைகளுடனும் தீபாவளியை கொண்டாட காத்துகொண்டிருக்கிறேன்.

விக்ரம் சார் உங்களிடம் சொல்ல வேண்டியது ஒன்று இருக்கிறது. படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் நீங்கள் "துருவை உன்னுடைய பையனா நினைச்சுக்கோ மாரி. உன்ன நம்பி விட்டுட்டு போறேன்." என சொன்னீர்கள். நான் அந்த நம்பிக்கையை காப்பாற்றி விட்டேன். விக்ரம் சார் நீங்கள் நம்பியது போல, எதிர்பார்த்தது போல, பைசன் இருக்கும், துருவின் வெற்றி இருக்கும். நான் இந்த வெற்றியை உங்கள் நம்பிக்கைக்கு சம்பர்ப்பிக்கிறேன்." என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com