'விக்கல்ஸ்' விக்ரமின் ’லைட் வெயிட் பேபி’ படப்பிடிப்பு நிறைவு! | Vikkals Vikram | LWB
ஸ்டாண்ட் -அப் காமெடியன் 'விக்கல்ஸ்' விக்ரம் மற்றும் ஃபிட்னஸ் ஸ்பெஷலிஸ்ட் ஆரத்தி கிருஷ்ணா ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் படம் 'லைட் வெயிட் பேபி- Light Weight Baby'. ஸ்டாண்ட்- அப் காமெடியனாகவும், 'பிக்பாஸ்' ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டவராகவும் பிரபலமான 'விக்கல்ஸ்' விக்ரம், இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவரே இப்படத்திற்கான வசனங்களையும் எழுதியுள்ளார். அவருக்கு ஜோடியாக உடற்பயிற்சி மற்றும் பாடி பில்டிங் துறையில் நன்கறியப்பட்ட ஆரத்தி கிருஷ்ணா நடிக்கிறார். இது அவருக்கு அறிமுக திரைப்படமாகும். கே.சி.குரு (K.C.Guru) எழுதி, இயக்கிவந்த இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
படத்தைப் பற்றி இயக்குநர் கே.சி.குரு தெரிவித்ததாவது, ''கடந்த 45 நாட்கள் ஓர் அற்புதமான பயணமாக அமைந்தது. ஒவ்வொரு படப்பிடிப்பு கட்டமும்... ஒவ்வொரு நகரமும்... இப்படத்திற்கு தனித்துவமான சிறப்பம்சங்களைச் சேர்த்தன. முற்றிலும் மாறுபட்ட உலகங்களைச் சேர்ந்த இருவரைப் பற்றிய ஒரு சிந்தனையாகத் தொடங்கிய இந்தக் கதை... தற்போது நாங்கள் உண்மையிலேயே பெருமைப்படும் ஒரு படைப்பாக உருவெடுத்துள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்தாலும், படத் தொகுப்பு அறையில் மற்றோர் உற்சாகமான கட்டம் தொடங்குகிறது. இந்த கதாபாத்திரங்களை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்த நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்'' என்றார்.
நாயகன் 'விக்கல்ஸ்' விக்ரம் தெரிவித்ததாவது, ''எனது திரைப் பயணத்தில் முதன்முறையாக நாயகனாக நடித்தது மிகவும் உற்சாகமான அனுபவங்களில் ஒன்றாகும். நடிப்பதுடன் வசனங்களையும் எழுதும் வாய்ப்பு கிடைத்தது, இந்தப் பயணத்தை மேலும் சிறப்பானதாக மாற்றியது. கேமராவிற்கு முன்னாலும், அதேசமயம் எழுத்து வடிவிலும்... ஒரு கதாபாத்திரத்தை வடிவமைப்பது அரிதான ஒன்று. இந்த அனுபவத்திற்காக ஒட்டுமொத்த குழுவிற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். பார்வையாளர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான மற்றும் மனதிற்கு நெருக்கமான பொழுதுபோக்கு திரைப்படமாக அமையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்'' எனப் பேசினார்.
ஆரத்தி கிருஷ்ணா பேசியபோது, ''ஃபிட்னஸ் என்பது எனக்கு எப்போதும் உடல் ரீதியான சவாலாகவே இருந்து வந்துள்ளது. ஆனால், நடிப்பு என்னை உணர்வுரீதியாக முற்றிலும் புதிய வழிகளில் சவாலுக்கு உட்படுத்தியது. இந்தக் கதாபாத்திரத்தில் நடித்தது எனக்குள் இருந்த வேறொரு பரிமாணத்தை கண்டறிய உதவியது. எனது முதல் மற்றும் முக்கியமான இந்த திரைப்படத்தை இவ்வளவு மறக்க முடியாத அனுபவமாக மாற்றி அமைத்த ஒட்டுமொத்த குழுவினருக்கும் நான் நன்றி கூறுகிறேன். பார்வையாளர்கள் இப்படத்தைப் பார்ப்பதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்" என்றார்.
படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், படக்குழுவினர் தற்போது படப்பிடிப்புக்குப் பிந்தைய தொழில்நுட்பப் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். ’லைட் வெயிட் பேபி’ - (Light Weight Baby) திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும். இப்படம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

