"விக்னேஷ் சிவன் கொடுத்த அன்புத் தொல்லை..." - கலகலப்பாக பேசிய எஸ்ஜே சூர்யா | S J Suryah | LIK
பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா நடித்து விக்னேஷ் சிவன் இயக்கி வெளியான படம் `LIK'. இந்தப் படத்தின் நன்றி அறிவிப்பு நிகழ்வு இன்று நடைபெற்றது. அதில் பேசிய எஸ்.ஜே.சூர்யா, "விக்னேஷ் சிவன் சாருக்கு என் மேல் மிகுந்த பிரியம் உண்டு. அந்தப் பிரியம் எந்த அளவுக்கு என்றால், ’சார் எங்க இருக்கீங்க’ என்பார். ’ஹைதராபாத்தில் `சரிபோதா சனிவாரம்' ஷூட்டிங்கில் இருக்கிறேன்’ என்பேன். ’நாளைக்கு கிளம்பி மலேஷியா வர முடியுமா’ என்பார். ’ஏன் சார்’ என்றால், ’இங்கு ஈர் ஏஷியா பில்டிங்கில் ஷூட் செய்கிறேன். நீங்கள் வந்தால் எடுக்கலாம், இல்லை என்றால் சில கோடி ரூபாய் செலவு செய்து செட் போட வேண்டும். முடிஞ்சா வாங்க, இல்லன்னா பரவாயில்லை’ என்றதும் அடுத்த சீன், நான் ஏர்போர்ட்டில் ஃபிளைட் பிடிக்க ஓடிக் கொண்டிருப்பேன்.
’மீசையை எடுத்துவிடலாமா சார்’ என்பார். ’பல படங்களுக்கு இதுதான் கன்ட்டினியூயிட்டி எடுக்க முடியாதே’ என நான் சொன்னால், ’எடுத்தால் நன்றாக இருக்கும்’ என்பார். ’எடுத்துவிட்டு வந்தால், இப்போதுதான் நியூ எஸ்.ஜே.சூர்யா மாதிரி இருக்கிறது’ என்பார். திடீரென போன் செய்து, ’20ஆம் தேதியிலிருந்து டேட் கிடைக்குமா’ என்று கேட்பார். ’பல படங்கள் போகிறது சார், அதிகபட்சம் என்னுடைய படத்தை வேண்டுமானால் நிறுத்தலாம்; வேறு படங்களை தொட முடியாது’ என்பேன். ’இல்ல பிரதீப் சார், ’ட்யூட்’ படத்துக்கு போகிறார், அதற்கு முன்பு முடிக்கச் சொல்லி கேட்கிறார். அதற்கான செட் போடுகிறேன். நீங்கள் வரவில்லை என்றால் என்ன, ஒரு 50 லட்சம் நஷ்டமாகும். பரவாயில்லை சார் போனால் போகட்டும்’ என்பார். எனக்கு மனசு கேட்காமல் போய்விடுவேன்.
சரி, படம் எல்லாம் முடிந்து ரிலீஸ் ஆகிவிட்டது. இப்போது அவரின் அன்புத்தொல்லை எப்படி என்றால், இரவெல்லாம் ஷூட் செய்துவிட்டு வந்து தூங்கும்போது போன் செய்வார். ’சார், படம் ஓடும் தியேட்டருக்கு நீங்கள் சென்று ’மயிலிறகே’ பாடலுக்கு ஆடினால் எப்படி இருக்கும் தெரியுமா’ என்பார். ’சார், நைட் ஷூட் இருக்கிறது’ என நான் சொன்னால், ’அது நீங்க அப்பறம் பண்ணலாம் சார். ஆனால் இது திரும்ப கிடைக்குமா’ எனக் கேட்பார்.
இவ்வளவு சுமைகளை எங்களுக்கு கொடுத்தாலும், அவரும் பல சுமைகளை தாங்கி, வலிகளை கடந்துதான் இந்தப் படத்தை வெளியே கொண்டுவந்திருக்கிறார். புதுமையாகவும், மக்களுக்குப் பிடிக்கும் வகையிலும் படத்தை எடுத்திருக்கிறார்" எனப் பேசினார்.

