‘லியோ’ பட ரிலீசுக்கு முன்பு இப்படி ஒரு பிளானா? - விஜய் குறித்து அடுத்தடுத்து குவியும் அப்டேட்டுகள்

‘லியோ’ படத்தின் ரிலீசுக்கு முன்னதாக தமிழ்நாடு முழுவதும் விஜய் பாதயாத்திரை செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவரின் 70 ஆவது படம் குறித்த செய்தியும் உலா வருகிறது. இதற்கிடையே இரவு பாடசாலைக்கான பணிகளிலும் மும்முரமாக விஜய் இருப்பதாக தெரிகிறது!
Vijay
VijayTwitter

‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் ‘லியோ’ படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகர் விஜய். இப்படம் வருகிற ஆயுத பூஜை, விஜய தசமி விடுமுறையை முன்னிட்டு வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகிறது. ‘லியோ’ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68 ஆவது படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக கடந்த மே மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

முன்பே பேச்சுவார்த்தை முடிந்துவிட்டாலும்கூட, ஒரு படம் முடியும் தருவாயில் இருக்கும்போதுதான், தனது அடுத்தப்படத்தின் அறிவிப்பை வெளியிடுவதை நடிகர் விஜய் வழக்கமாக வைத்திருப்பார். இருப்பினும் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு முடிவதற்கு 2 மாதங்களுக்கு முன்பே ‘தளபதி 68’ படத்தின் அறிவிப்பு வெளியானது திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

Vijay 68th film
Vijay 68th film

இந்த ஆச்சர்யம் ஓய்வதற்குள், தமிழ்நாட்டில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து நடிகர் விஜய் அரசியலுக்கு ஆயத்தமாகி வருகிறாரென்றும், அதனால் வெங்கட் பிரபு படத்தோடு சினிமாவிலிருந்து சிறிது காலம் பிரேக் எடுக்க உள்ளதாகவும் தகவல் பரவியது. அதற்கு முன்னோட்டமாகத்தான், 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை சென்னைக்கு அழைத்து கடந்த மாதம் கல்வி உதவி வழங்கும் விழாவை விஜய் நடத்தியதாகவும் கூறப்பட்டது.

Vijay
முடிந்தது லியோ படப்பிடிப்பு பணிகள்.. அடுத்து அரசியல்தானா? - நிர்வாகிகளுடன் நாளை ஆலோசிக்கிறார் விஜய்!

அந்த விழா திட்டமிட்டதை விட அதிக காலநேரம் எடுத்துக்கொண்டுவிட்டதால், அப்போது இதனை ஒருங்கிணைந்த தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்க முடியாமல் போன நிலையில், தற்போது அவர்களை சந்திக்கிறார் விஜய். இதற்காக நேற்று முதல் நாளை வரை மூன்று நாட்கள் அவர்களை தனது பனையூர் இல்லத்தில் சந்திக்க திட்டமிட்டு அதன்படி அவர்களுடன் புகைப்படம் எடுத்து ஆலோசனையும் நடத்தி வருகிறார் விஜய். நேற்று பத்துக்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து புகைப்படம் எடுத்த நிலையில், இன்று அடுத்தகட்ட பொறுப்பாளர்களை சந்திக்க உள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் ஒற்றுமை பயணம் மேற்கொண்டது போன்று, ‘லியோ’ படத்திற்கு முன்னதாக நடிகர் விஜய் தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கல்வி உதவி வழங்கும் விழாவில், மாணாக்கர்கள் இடையே உரையாற்றிய விஜய், அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களைப் பற்றி மாணவ, மாணவிகள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று பேசியிருந்த நிலையில், வரும் 15 ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, இரவு பாடசாலை திட்டத்தை தொடங்குகிறார் நடிகர் விஜய்.

அதாவது 234 தொகுதிகளில் இரவு பாடசாலை திட்டத்தை தொடங்கவும், இத்திட்டத்துக்கு படிப்பகம், பயிலகம், கல்வியகம், அறிவொளியகம் என்ற பெயர்களில் ஒன்றை வைக்கவும் விஜய் முடிவு செய்துள்ளார். 234 தொகுதிகளை குறிவைத்தே உலக பட்டினி தினத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மதிய உணவு, கல்வி உதவி வழங்கும் விழா, தற்போது இரவு பாடசாலை என பணியாற்றி வருகிறார் விஜய்.

இதற்கிடையில், ‘நண்பன்’ படத்தில் ஷங்கருடன் கூட்டணி அமைத்த விஜய், தனது 70 ஆவது படத்திற்காக மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஷங்கர் கூறிய ஒன்லைனர் விஜய்க்கு பிடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அரசியல் களத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இதற்கிடையே விஜய்யின் 69-வது படம் எதுவென இன்னும் உறுதிசெய்யப்படவில்லை, அதுபற்றிய தகவலும் இல்லை.

இயக்குநர் ஷங்கர் தற்போது கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’, ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ ஆகியப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த இரு படங்களும் அடுத்தாண்டு பொங்கல் மற்றும் கோடை விடுமுறைகளை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இதனால் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விஜய்யின் படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதுவதில் இயக்குநர் ஷங்கர் கவனம் செலுத்த உள்ளதாகவும் தெரிகிறது. இதனால் முழுமையாக அரசியலில் இறங்கப் போகிறாரா அல்லது சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலுமே விஜய் கவனம் செலுத்தப்போகிறாரா என்பது அவரின் அடுத்த நகர்வுகள் மூலம் தெரிய வரும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com