சென்னை சத்யம் சினிமாஸில் ரசிகர்களுடன் ஒன்றாக அமர்ந்து மாமன்னன் திரைப்படத்தை பார்த்த பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர் உதயநிதி ஸ்டாலின், நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர்.
இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், “மாமன்னன் திரைப்படம் மக்களை நம்பி எடுக்கப்பட்ட படம். நல்ல கருத்துக்களையும், சமூகத்திற்கு அவசியமான கருத்துக்களையும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள், கைவிட மாட்டார்கள் என எடுக்கப்பட்ட திரைப்படம். இந்த திரைப்படம் மக்களுக்கு பிடித்திருக்கிறது என்பது கடந்த காட்சிகள் மூலம் எங்களுக்கு தெரியவந்துள்ளது. மக்கள் அனைவரும் மிகவும் எமோஷனலாக இந்த கதையில் இணைந்துள்ளனர்.
மக்கள் மற்றும் ரசிகர்கள் ஆகியோருக்கு எனது நன்றிகள். திரைப்படக் கதையில் என்ன இருக்கிறது, எதைப் பேசுகிறது என்பதை மக்கள் உணர்ந்து முடிவு செய்யட்டும். இந்த திரைப்படத்தை எடுக்கவே முடியாது என நினைத்தேன். ஆனால் படம் வெற்றிகரமாக வெளிவந்துள்ளது இதற்காக நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு எனது நன்றிகள்.” என்று தெரிவித்தார்.
இதையடுத்து நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “மாமன்னன் திரைப்படத்தின் முழு வெற்றியும் இயக்குநர் மாரி செல்வராஜின் எழுத்துக்கானது. அதேநேரத்தில் ஒட்டுமொத்த குழுவான நடிகை கீர்த்தி சுரேஷ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் வடிவேலு உள்ளிட்ட அனைவருக்கும் சொந்தமானது. இந்தத் திரைப்படம் எனது கடைசி திரைப்படம் என ஏற்கனவே தெரிவித்து விட்டேன். இந்த திரைப்படம் என்னுடைய எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்து விட்டது. மீண்டும் நடிக்க வாய்ப்பில்லை. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே நாங்கள் முயல்கிறோம். மக்கள் திருந்த வேண்டும். அதற்கு இந்த அரசாங்கம் எப்பொழுதும் ஒத்துழைப்பாக இருக்கும்” என்றார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் பேசுகையில், “மாரி செல்வராஜ் என்ன திரைப்படத்தை எடுக்க முயன்றாரோ அதை முழுமையாக எடுத்து முடித்து விட்டார். இந்த திரைப்படம் பல நல்ல விஷயங்கள் நடைபெறுவதற்கு தொடக்கமாக இருக்கும்” என நம்புவதாக தெரிவித்தார்.