
விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கிய படம் `தலைவன் தலைவி'. கணவன் மனைவிக்கு இடையேயான சண்டைகளை மையமாக வைத்து உருவான இப்படம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக மாறியது. மீடியம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்தின் இந்திய வசூல் 67.78 கோடி எனவும் உலக அளவில் 85 கோடிக்கும் அதிகமான வசூல் எனவும் சொல்லப்படுகிறது.
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் அபிஷன் ஜீவிந்த் இயக்கி பெரிய ஹிட்டான படம் `டுரிஸ்ட் ஃபேமிலி'. 10 கோடிக்கு குறைவான பட்ஜெட்டில் உருவான இப்படம் இந்திய அளவில் வசூல் செய்தது 70 கோடிக்கும் மேல், உலக அளவில் 90 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் பெரிய எதிர்பார்ப்போடு வந்த படம் `தக் லைஃப்'. இப்படத்தின் இந்திய வசூல் 56.05 கோடி எனவும் உலகளவில் 97 கோடிக்கு மேலும் வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது.
சூர்யா - கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் உருவான `ரெட்ரோ' கேங்ஸ்டர் படமாக வந்தது. இந்தப் படத்தின் இந்திய வசூல் 71.35 கோடி எனவும், உலக அளவில் 97.35 எனவும் சொல்லப்படுகிறது.
சிவகார்த்திகேயன் - முருகதாஸ் கூட்டணியில் நல்ல எதிர்பார்ப்புக்கு நடுவே வெளியான படம் `மதராஸி'. இப்படத்தின் இந்திய வசூல் 73.75 மற்றும் உலகளாவிய வசூல் கிட்டத்தட்ட 100 கோடி எனவும் சொல்லப்படுகிறது.
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கிய படம் `ட்யூட்'. வளர்ந்து வரும் நட்சத்திரம் பிரதீப் படம் என்பதாலும், படத்தின் பாடல்களுக்கு கிடைத்த ரீச்சாலும் பெரிய அளவு எதிர்பார்க்கப்பட்ட படம். இப்படத்தின் இந்திய வசூல் 86 கோடிக்கு மேல் எனவும், உலகளவில் 115 கோடி எனவும் சொல்லப்படுகிறது.
அஜித் - மகிழ் திருமேனி கூட்டணியில் உருவான படம் `விடாமுயற்சி'. படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்களே கிடைத்தது என்றாலும் இந்திய அளவில் 95 கோடி, உலக அளவில் 135 கோடி என்கிறார்கள்.
பிரதீப் ரங்கநாதன் - அஷ்வத் மாரிமுத்து கூட்டணியில் வந்த படம் `டிராகன்'. இந்த ஆண்டின் பெரிய லாபகரமான படத்தில் இப்படமும் ஒன்று. இதன் இந்த வசூல் 118 கோடி, உலகளாவிய வசூல் 152.
அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவான படம் `குட் பேட் அக்லி'. படத்துக்கு கலவையான விமர்சனங்கள் தான் என்றாலும், அஜித் ரசிகர்களுக்கான கொண்டாட்டமாக மாறியது படம். இதன் இந்திய வசூல் 180 கோடி எனவும், உலக அளவில் வசூல் 250 கோடி எனவும் சொல்லப்படுகிறது.
ரஜினிகாந்த் - லோகேஷ் கூட்டணியில் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி, அதிகம் கேலிக்கு உள்ளான ஒரு படமாக மாறியது `கூலி'. இதன் இந்த வசூல் 330 கோடி, உலகளவில் 520 கோடி என்கிறார்கள்.
பின் குறிப்பு: இதில் உள்ள வசூல் விவரங்கள் சில ட்ராக்கர் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களிடம் இருந்து பெறப்பட்டதே, எனவே வசூலின் துள்ளியம் முன் பின் இருக்க கூடும். இந்த வசூல், உலக வசூல் இரண்டும் Gross எனப்படுகிற மொத்த தொகையே குறிப்பிடப்பட்டுள்ளது.