10 நாட்களில் 5 மடங்கு வசூல்.. பட்டையை கிளப்பும் `தாய் கிழவி'! | Thaai Kizhavi
சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் உருவான 'தாய் கிழவி' படம், 10 நாட்களில் 50 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. ராதிகா, சிங்கம் புலி உள்ளிட்ட பலர் நடித்த இப்படம், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியானது. பிரபலங்கள் புகழ்ந்த இப்படம், தமிழ் சினிமாவில் மிக லாபகரமான படமாக மாறியுள்ளது.
சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா, சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன், ரெபேக்கா எனப் பலரும் நடித்த படம் `தாய் கிழவி'. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான இப்படம் வெளியாகி மிகப்பெரிய பாராட்டுகளை பெற்றது. இயக்குநர் ஷங்கர், அட்லீ, நடிகை ஜோதிகா உட்பட பல பிரபலங்கள் இப்படத்தை புகழ்ந்து பதிவிட்டனர்.
இப்போது வசூல் ரீதியிலும் படம் ஒரு சாதனையை செய்துள்ளது. வெளியான முதல் நாளில் இந்திய வசூல் 2.65 கோடி என சொல்லப்பட்டது. அதன் பின் படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்து வெளியான மூன்று நாட்களில் உலக அளவில் 22 கோடி வசூல் செய்துள்ளது என படக்குழு அறிவித்தது. படம் வெளியாகி 10 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், தற்போது இப்படம் உலக அளவில் 50 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.
10 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவான இப்படம், பெரிய அளவில் வசூல் செய்து பெரிய லாபத்தை அடைந்து வருகிறது. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் மிக லாபகரமான படம் என்ற இடத்தில் ஜீவா நடித்த `தலைவர் தம்பி தலைமையில்' படம் இருந்தது. இரண்டாவது இடத்தில் `தாய் கிழவி' இருந்தது. விரைவிலேயே அந்த இடத்தை `தாய் கிழவி' பிடித்துவிடும் என சொல்லப்படுகிறது.

