“தியேட்டருக்கு பிறகு ஓடிடியில் வெளியாகும் படத்திற்கு ராயல்டி வேணும்”-திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்

திரையரங்கு கட்டணத்தை உயர்த்த வேண்டும், திரையரங்குகளை கமர்ஷியலாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
திரையரங்கு
திரையரங்குகோப்புப் படம்

சென்னை தேனாம்பேட்டையில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் பேசியதாவது,

“திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதுதொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. நான்கு வாரத்தில் ஓ.டி.டி யில் திரைப்படம் வெளியாவதால் மக்களின் கூட்டம் குறைகிறது. வரும் காலங்களில் 8 வாரங்களுக்குப் பிறகுதான், ஓ.டி.டி.க்கு புதிய திரைப்படங்களைக் கொடுக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம். அதற்கான விளம்பரங்களை 4 வாரங்களுக்குப் பிறகுதான் வெளியிட வேண்டும் என்று திரைப்பட தயாரிப்பாளர்களிடம் வலியுறுத்த உள்ளோம்.

திரையரங்குகளில் திரைப்படம் மட்டுமே வெளியிட வேண்டும் என்பதை மாற்றி வேறு நிகழ்ச்சிகள் கமர்ஷியலாக நடத்த அனுமதிக்க வேண்டும். உலக கால்பந்து போட்டிகள், ஐ.பி.எல், கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்ப அனுமதிக்க வேண்டும். நல்ல திரைப்படங்கள் வருவது குறைந்துவிட்டது. 3 மாதத்திற்குப் பிறகு ‘மாமன்னன்’ படம் வெளியானதில் மக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. ‘குட் நைட்’ திரைப்படம் கூட வரவேற்பு பெற்றது. அதேபோல் பெரிய நடிகர்கள் மட்டுமே வைத்து திரைப்படம் எடுக்காமல் புது புது நடிகர்களை வைத்து படம் எடுத்தால் படம் நன்றாக ஓட வாய்ப்பு இருக்கும். இதை இயக்குநர்கள் கவனிக்க வேண்டும்.

ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்களுக்கு 10% ராயல்டி எங்களுக்கு கொடுக்கவேண்டும், திரையரங்குகளில் வெளியாகும் வசூலை வைத்து தான் ஓ.டி.டி யில் வெளியிட நினைக்கின்றனர். எனவே ராயல்டி அவசியம்” என்று தெரிவித்தார்.

திரையரங்கில் விற்கும் தின்பண்டங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வது குறித்த கேள்விக்கு, அதன் மூலம் தான் வியாபாரம் நடப்பதாக அவர் கூறினார். மேலும் பேசுகையில், ஆண்டுக்கு ஒரு படம் என்பதை கடந்து பெரிய நடிகர்களான ரஜினி, அஜித், விஜய், கமல் உள்ளிட்டவர்கள் ஆண்டுக்கு இரு படங்களில் நடிக்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

முன்னதாக, திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் உயர்த்துவது தொடர்பான கோரிக்கை எழுந்துள்ள நிலையில் திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த மற்றொரு சங்கமான தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் சங்கத் தலைவர் சக்தி சுப்பிரமணியம்,

“திரையரங்கு டிக்கெட் கட்டணம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உள்ளிட்ட நகரங்களில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் முன்வைத்துள்ளனர். தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பாக அதனை முன் வைக்கவில்லை. தற்போது உள்ள டிக்கெட் கட்டணமே போதுமானது. சிறிய கிராமங்களில் மட்டும் டிக்கெட் விலை 100, 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனை 120 , 150 ரூபாயாக மாற்றி தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

தற்போது அனைத்து பகுதிகளிலும் ஒரே நேரத்தில் திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. ஒரே மாதிரியான மின் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதால் கிராமங்களில் உள்ள திரையரங்குகளுக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டுமே தவிர, தற்போது உள்ள கட்டணமே போதும். மீண்டும் கட்டணம் உயர்த்தப்படுமேயானால் திரையரங்கிற்கு வருபவர்களின் எண்ணிக்கை குறையும்.

ஏற்கனவே ஓடிடி காரணமாக 40% வருகை குறைந்து இருக்கிறது. தமிழக அரசு மாநகராட்சி வரியை ரத்து செய்ய வேண்டும். அவை ரத்து செய்யப்படும் பட்சத்தில் டிக்கெட் கட்டணத்தில் 20 ரூபாய் குறையும் . மேலும் தற்போதுள்ள மின் கட்டண உயர்வுக்கு ஏற்றவாறு 5 வருடங்களாக உயர்த்தப்படாமல் உள்ள பராமரிப்பு கட்டணத்தை உயர்த்தி வழங்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com