"தமிழ் சினிமாவே சீரழியும் நிலையில் இருக்கிறது!" - பற்றி எரியும் ஜனநாயகன் விவகாரம்
விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கியுள்ள படம், ‘ஜனநாயகன்’. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பிரகாஷ்ராஜ் எனப் பலரும் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தாண்டு பொங்கல் வெளியீடாக ஜனவரி 9ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிடப்பட்டது. இப்படத்துக்கு CBFC சான்றிதழ் வழங்குவதில் சிக்கல்கள் காரணமாக இன்னும் வெளியாகாமல் இருக்கிறது.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் இப்படத்தின் சில காட்சிகள் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியானது மேலும், சில மணிநேரங்களில் முழுப்படமும் வெளியானது. இது குறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் ஆகியோர் இணைந்து செய்தியாளர்களை சந்தித்துள்ளனர்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் கதிரேசன் பேசிய போது "ஜனநாயகன் படம் வெளியானதிலிருந்து அதிர்ச்சியான சூழலில் இருக்கிறோம். 400 கோடிக்கு எடுக்கப்பட்டு இன்னும் வெளியாகாத ஒரு படம், இணையத்தில் கசிந்திருப்பதால் பேரதிர்ச்சியாக இருக்கிறது. அதுவும் இவ்வளவு தெளிவான பிரிண்ட் வெளியாவது இதுவே முதல் முறை. இதனை காவல் துறை மற்றும் அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டுவரவே இன்று கூடி இருக்கிறோம். பல கோடி ரூபாய் சம்பந்தப்பட்டிருக்கும் ஒரு படம், அதை நம்பி பலரும் இருக்கிறார்கள்.
நேற்றிலிருந்து ஃபைனான்ஸியர்கள் எனக்கு போன் செய்ய துவங்கிவிட்டார்கள். இப்படி ஆகும் என்றால் இனி இந்தப் படங்களுக்கு எப்படி நம்பி பணம் கொடுப்பது. எங்களுக்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது. இந்தப் படம் கசிந்ததால் திரைத்துறையை சீரழிந்து, இனி எப்படி இயங்கும் என்றே தெரியாமல் இருக்கிறது. ரிலீசுக்கு பிறகு வரும் படங்களுக்கே பாதிப்பு என்றால், ரிலீஸ் ஆகாத ஒரு படத்துக்கு எவ்வளவு பெரிய பாதிப்பு. இந்திய சினிமாவில் இப்படி நடப்பது இதுவே முதல் முறை. இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரு படம் தயாராகும் போது VFX, டப்பிங், ரீ ரெக்கார்டிங், சென்சார் என ஆறு ஏழு காப்பி பிரிப்பார்கள். இப்படி பல இடங்களுக்கு செல்லும் படத்தை எங்கிருந்து வெளியானது என எப்படி கண்டுபிடிக்க முடியும். இவ்வளவு ரிஸ்க்கான தொழிலை தான் தயாரிப்பாளர்கள் செய்கிறார்கள். இதற்கு தீர்வு காண, திரைப்பட சங்கத்தினர் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து, தேர்தல் முடிந்த பிறகு மாநில அரசு, மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்க இருக்கிறோம். முடிந்தால் அன்று படப்பிடிப்பை நிறுத்திவிட்டு அனைவரும் இணைந்து ஒரு பேரணியாக செல்வோம்." என்றார்
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன தலைவர் RK செல்வமணி பேசிய போது "இந்தியாவில் நடந்த மிகப்பெரிய திருட்டு இது. ஆனால் எதுவுமே நடக்காதது போல் அமைதியான சூழல் நிலவுகிறது. வங்கியில் ஒரு 500 கோடி திருட்டு போயிருந்தால், இந்தியாவே அலறும் இல்லையா? அது போல ஒரு 500 கோடி ரூபாய் சொத்து திருடப்பட்டு பல லட்சம் பேரிடம் போய் சேர்ந்திருக்கிறது. இந்தப் படம் வரும் என்ற நம்பிக்கையில் நான்கு மாதங்களாக திரையரங்க உரிமையாளர்கள் காத்திருக்கிறார்கள். இன்று சினிமா மோசமான சூழலில் இருக்கையில் இந்தப் படம் வந்தால் நல்ல வருமானம் கிடைக்கும் என காத்திருக்கையில் இப்படி நிகழ்ந்திருக்கிறது. எந்த பாதுகாப்பும் இல்லாமல் இந்த துறை இருக்கிறது. ஒரு ஆங்கில திரைப்படம் இப்படி வெளியானால் அதற்கு கைது நடவடிக்கை எடுக்க வழி இருக்கிறது. ஒரு இந்திய திரைப்படம் இப்படி வரும் போது எந்தக் கேள்வியும் இல்லாமல் இருக்கிறது.
எடிட் பிரிண்ட் வெளிவந்திருக்கிறது என நாங்கள் எங்கள் தரப்பில் எடிட்டரை விசாரித்த போது, கன்னடத்திற்கு டப்பிங் செய்ய ஒரு காப்பி அனுப்பி இருக்கிறார்கள், ஹைதிராபாத் மிக்சிங் செய்ய ஒரு காப்பி போய் இருக்கிறது என சொல்கிறார்கள். அங்கிருந்து வந்ததா என தெரியவில்லை. வெளியேவந்து ஒரு ஆபத்து என்றால், ஒரு திருட்டு பொருளை எந்த பயமும் இல்லாமல் பலருடைய வீட்டுக்கு சென்று சேர்த்திருக்கிறார்கள். அதற்கு எந்த ரியாக்ஷனும் இல்லாமல் இருக்கிறது.
ஃபிலிமில் இருந்தவரை அந்த காப்பி ஒருவர் கட்டுப்பாட்டில் இருந்தது. அது கண்டிப்பாக ரிலீஸ்க்கு முன் வெளியாக வாய்ப்பில்லை. இது டிஜிட்டலாக மாறும் போது அதுவும் பேன் இந்தியா படமாக உருவாகும் போது பல இடங்களில் இப்படத்தின் வேலை நடக்கிறது. எனவே இணையத்தில் வழியில் தான் ஒவ்வொரு பரிமாற்றமும் நடக்கிறது. இதனை கைப்பற்றுவது டிஜிட்டல் திருடர்களுக்கு சாதாரண விஷயம். இப்படி மாறி உள்ள சிஸ்டம் சரி இல்லை என தான் கமல் சார் ட்வீட் செய்தார்.
திரையரங்கிற்கு இது ஒரு திருவிழா போல இருந்திருக்கும், அதன் மூலம் விநியோகஸ்தர், அவர் மூலம் தயாரிப்பாளர், அவர் மூலம் தொழிலாளர்கள் என பணம் ஒரு சங்கிலித் தொடர் போல சென்றிருக்கும். இப்போது அந்த சங்கிலி அறுந்துவிட்டது. இந்த ஆண்டு அனைவரும் எதிர்பார்த்த ஒரு படம் இது. இது இப்படி வெளியானதில் அதிர்ச்சி, இழப்பும் கூட. மத்திய மாநில அரசுகளுக்கு ஒரு கோரிக்கை, குறைந்த பட்சம் இப்படியான சம்பவம் நடந்தால் திருடர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துங்கள். இது இணையத்தின் மூலமாக பரவுகிறது, அது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எனவே அவர்கள் இதனை தடுக்க ஒரு வழி செய்ய வேண்டும்." என்றார்.
தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் அருள்பதி பேசிய போது "படத்தின் தயாரிப்பாளர்களுக்கு 70 - 80 கோடி பணம் செலுத்தி இருக்கிறோம். காலதாமதத்தால் இடிந்து போயிருந்த இந்த சமயத்தில் இன்னொரு பேரிடியாய் இந்த கசிவு. இதனை பெரிய செய்தியாக்கி அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு போக வேண்டும். அரசால் தான் முடியுமே தவிர தனி மனிதரால் தடுக்க முடியாது. தமிழ் சினிமாவின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும். கிட்டத்தட்ட 400 - 500 பேர் சம்பந்தப்பட்டு வேலை செய்யும் படத்தில் எங்கிருந்து படம் கசிகிறது என்பது புரியாத புதிராகவே இருக்கிறது." என்றார்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க இணை செயலாளர் சுஜாதா பேசிய போது "இதனை ஒரு தயாரிப்பாளரின் பிரச்சனையாக தான் பார்க்கிறோம். படம் முடிந்ததும் நடித்தவர்களுக்கு, தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் சம்பளம் சென்றுவிடும். இது ஜனவரியில் வர வேண்டிய படம். அதனை நம்பி திரையரங்க உரிமையாளர்கள், விநியோயோகஸ்தர், தயாரிப்பாளர் இருக்கிறார்கள். சேனல், ஓடிடி கூட இதனை நம்பி இருப்பார்கள். அவர்கள் எல்லோருக்குமான நஷ்டம் தான் இது. இவ்வளோ பெரிய ஹீரோ, இவ்வளவு பெரிய படம், இவ்வளவு பெரிய நிறுவனத்துக்கே இந்த கதி என்றால், மற்றவர்களின் நிலையை யோசித்து பாருங்கள்." என்றார்.

