"இது கடவுளின் தேசம் அல்ல.. அன்பின் தேசம்!" - சூர்யா | Suriya | Vishwanath and Sons
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம், `விஸ்வநாத் & சன்ஸ்'. இப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் புரமோஷனல் நிகழ்வு சமீபத்தில் கேரளாவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய சூர்யா, "கேரளாவை ’கடவுளின் தேசம்’ என்பார்கள். ஆனால், ’அன்பின் தேசம்’ என்றுதான் நான் சொல்வேன். இந்த அன்பு எனக்கு கிடைக்க துவங்கியது 20 வருடங்களுக்கு முன்பு என நினைக்கிறேன். அப்போது பள்ளி, கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது வேலை, திருமணம், குழந்தைகள் என நகர்ந்திருப்பார்கள். ஆனாலும், அந்த அன்பு மாறவே இல்லை. இந்த அன்பு எனக்கு Lifetime Settlement. இதற்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. உலகில் எங்கு போனாலும், அங்கு ஒரு மலையாளி இருப்பார். அவர் நல்ல சிரிப்போடு கை கொடுப்பார்.
விஸ்வநாத் & சன்ஸ் மறுபடி எனக்கு ஓர் அடையாளத்தைக் கொடுப்பதாக நான் பார்க்கிறேன். சஞ்சய் பாத்திரத்தை எனக்குக் கொடுத்ததற்கு வெங்கிக்கு நன்றி. என்னதான் ஹைதராபாத்தில் படம் எடுத்தாலும், அது ஒரு கேரளா போல்தான் இருந்தது. எங்கள் ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி, கலை இயக்குநர் பங்கலான் என பலரும் மலையாளிகள். 100 நாட்கள் நடந்த படப்பிடிப்பில் எல்லோரும் ஒரே குடும்பம்போல இருந்தோம்.
மமிதா பற்றி சொல்வதென்றால், எங்கெல்லாம் நம்பிக்கை இருக்கிறதோ அங்கு மேஜிக் நடக்கும் எனச் சொல்லி இருக்கிறேன். அதுதான் அவருக்கு நடக்கிறது. சின்ன வயதில் நடிக்கத் துவங்கி, இப்போது மைய கதாபாத்திரமாக நடிப்பது வரை வளர்ந்து இருக்கிறார்.
இந்தப் பாத்திரத்தில் நடிக்கவைக்க அவரைத் தவிர யாரும் பொருத்தமாக இல்லை. அந்த அளவு அவர் கச்சிதமாக இதில் நடித்திருக்கிறார். அவர் தேர்வு செய்யும் பாத்திரங்களால், சினிமா மேல் மற்ற பெண்களுக்கும் நம்பிக்கையை பிறக்க செய்கிறார்" என்றார்.

