டீசல் டிரெய்லர் பார்த்து STR அண்ணன் சொன்ன விஷயம்! - ஹரீஷ் கல்யாண் | Simbu | Diesel
ஹரீஷ் கல்யாண் நடிப்பில் சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ள படம் `டீசல்'. இப்படம் தீபாவளி ரிலீஸ் ஆக அக்டோபர் 17 வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் பேசிய நடிகர் ஹரீஷ் கல்யாண் "பல தாமதங்களுக்கு பிறகு இந்த இடத்திற்கு வந்திருக்கிறோம். முதலில் இப்படியான கதையில் என்னால் நடிக்க முடியும் என என் மேல் நம்பிக்கை வைத்த இயக்குநருக்கு நன்றி. எனக்கு தனிப்பட்ட முறையில் நிறைய ஆக்ஷன் படங்கள் பிடிக்கும். நான் ஒரு ஆக்ஷன் படம் செய்ய சரியான கதை அமைய வேண்டும் எனக் காத்திருந்தேன். அப்படி ஒரு படமாக அமைந்தது டீசல்.
க்ரூட் ஆயிலில் இருந்து பெட்ரோல், டீசல் உட்பட 160க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் வருகிறது. அதனை கருப்பு தங்கம் என்பார்கள். அதனை மையமாக வைத்து உருவான இந்தக் கதை மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியான போது எனக்குள் ஒரு சந்தேகம் வந்தது. நமக்கு இப்படம் பிடித்து செய்துவிட்டோம். மக்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள், ஆக்ஷன் அவதாரத்தில் என்னை ஏற்பார்களா? என்ற தயக்கம் இருந்தது. டிரெய்லர் வந்த பிறகு யாரும் திட்டவில்லை. பிறகு இரண்டு நாட்கள் முன் STR அண்ணன் கால் செய்தார். 'டிரெய்லர் பார்த்தேன். உன்னடைய பர்ஃபாமென்ஸ் எல்லாம் தாண்டி எனக்கு ஒரு விஷயம் பிடித்திருந்தது. ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்கு தேவையான மீட்டர் உன்னிடம் இருக்கிறது' எனப் பாராட்டினார். அது எனக்கு ஒரு தன்னம்பிக்கையை கொடுத்திருக்கிறது.
இந்தப் படத்தை நான் பார்த்துவிட்டேன். அந்த நம்பிக்கையில் சொல்கிறேன், இது மக்களுக்கு கனெக்ட் ஆகும் ஒரு படமாக இருக்கும். தீபாவளி ரேஸில் வரக் காரணம் என்ன என்றால், பெரிய காரணம் எதுவும் இல்லை. பெரிய பட்ஜெட், தீபாவளி விடுமுறை. எல்லா படத்திற்கும் ஒரு விதி இருக்கும். அந்தந்த படங்கள் அதற்கு ஏற்ப வந்து நிற்கும். அப்படித்தான் இந்தப் படம் தீபாவளிக்கு வருவதும். போட்டியாக நினைத்தால் போட்டி, இல்லை என்றால் இல்லை." என்றார்.