ஹவுஸ்புல் காட்சிகள்; வசூலில் மிரட்டும் சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ - 2 நாட்களில் இத்தனை கோடிகளா?
யோகி பாபு நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான ‘மண்டேலா’ படத்தை எடுத்து, இயக்குநராக அறிமுகமானப் படத்திலேயே தேசிய விருது வென்றவர் இயக்குநர் மடோன் அஸ்வின். அனைத்து தரப்பு மக்களையும் இந்தப் படம் கவர்ந்திருந்தது. இப்படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குநர் மற்றும் சிறந்த திரைக்கதை (வசனம்) ஆகியவற்றிற்காக இரண்டு தேசிய விருதுகளை மடோன் அஸ்வின் வென்றிருந்தார். இப் படத்தைத் தொடர்ந்து, தனது அடுத்தப் படமாக சிவகார்த்திகேயனுடன் இணைவதாக பேச்சு எழுந்தபோதே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
மேலும், ‘விருமன்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிப்பதாக அறிவிப்பு வெளியானதால், கூடுதல் எதிர்பார்ப்பு நிலவியது. இடையில், இப்படத்தின் படப்பிடிப்பின்போது சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் மடோன் அஸ்வின் ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவியதாகவும், படம் பாதியிலேயே நின்று விட்டதாகவும் பேச்சுகள் எழுந்த நிலையில், அதனை மறுத்து படப்பிடிப்பை திட்டமிட்டப்பட்டி முடித்திருந்தது படக்குழு.
இதனைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 14 ஆம் தேதி) ‘மாவீரன்’ என்றப் பெயரில் தமிழிலும், ‘மகாவீருடு’ என்றப் பெயரில் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் வெளியான இப்படம் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனால், முதல் நாளில் இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 7.6 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. உலக அளவில், 12 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. மேலும், நேற்று சனிக்கிழமை வார விடுமுறை என்பதால், இரண்டாம் நாளில் கூடுதலாக வசூலித்துள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் நேற்று மட்டும் 9.34 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இரண்டு நாட்களில் ‘மாவீரன்’ படம் 25 முதல் 26 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. அதேபோல், மூன்றாவது நாளான இன்றும் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. பல இடங்களில் கூடுதல் காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு வெளியான படங்களில் முதல் நாள் வசூலில் ‘பொன்னியின் செல்வன் 2’, ‘வாரிசு’, ‘துணிவு’, ‘வாத்தி’ படங்களை அடுத்து ‘மாவீரன்’ படம் சாதித்துள்ளது. இப்படத்தை அடுத்து ‘மாமன்னன்’ படம் உள்ளது. இன்றும் வார விடுமுறை நாள் என்பதால், 30 கோடி ரூபாய்க்கும் மேல் இப்படம் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ‘டாக்டர்’, ‘டான்’ படங்களை அடுத்து சிவகார்த்திகேயனுக்கு இப்படம் 100 கோடி ரூபாய் வசூலை பெற்றுத் தரும் என்றும் சினிமா வட்டாரத்தில் கூறப்பட்டு வருகின்றன.