“ஒரு நடிகனாய் என்னுடைய வேலை இதுதான்..” -மாவீரன் செய்தியாளர் சந்திப்பில் சிவகார்த்திகேயன் சொன்ன பதில்
மடோன் அஸ்வின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், சரிதா, மிஷ்கின், யோகி பாபு, தெலுங்கு நடிகர் சுனில் வர்மா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாவீரன்’. இப்படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. அதே தினத்தில் ‘மகாவீருடு’ என்ற பெயரில் படம் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இப்படத்தின் படக்குழுவினர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது சிவகார்த்திகேயன் மேடையில் பேசியபோது, “மடோன் எடுத்த படம் அனைத்தும் கடுமையான கதைகள். ஆனால் அதை ஜனரஞ்சகமாக மக்களிடம் எப்படி கொண்டு செல்ல வேண்டும் என தெரிந்து கொண்டு பணியாற்றி உள்ளார். படப்பிடிப்பில் ஒரு நாள் கூட அவர் யாரையும் திட்டியது இல்லை. ஆனால், அனைவரையும் வேலை வாங்குவதில் நல்ல திறமையாளர். நான் இயல்பாக நடிப்பதை போல் இந்த படம் இருக்காது, வேறு பாதையில் நடித்து உள்ளேன். இந்த படம் ஒரு பேண்டசி படம். தயாரிப்பாளர் பணம் அளிப்பவர் மட்டுமில்லாமல் ஒரு இயக்குநரின் மனதில் இருக்கும் கதையை எப்படி மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என யோசிப்பவரும்தான்” என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, திரையரங்குகளில் சினிமா டிக்கெட்டின் விலை உயர்வு கோரிக்கை தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “திரையரங்குகளின் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்; அதற்கு அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு நடிகனாய் என்னுடைய படம் மக்களிடம் சரியாக செல்கிறதா, அவர்களுக்கு பிடித்தது போல் இருக்கின்றதா என்பதை பார்ப்பது மட்டும்தான் எனக்கானது. படங்கள் இயக்குவது என்பது மிக மிகக் கடுமையான பணி; எனக்கு படங்கள் இயக்குவதற்கு எப்போது தன்னம்பிக்கை வருகிறதோ, அப்போது இயக்கத் தொடங்குவேன்” எனக் கூறினார்.