பாடகி எஸ் ஜானகியின் மகன் காலமானார்! | S Janaki | Murali Krishna
பிரபல பாடகி எஸ் ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா உடல்நலக்குறைவால் காலமானார். 65 வயதான முரளி, தனது அம்மா ஜானகியுடன் ஐதராபாத்தில் வசித்து வந்தார். திரைத்துறையினர் ஜானகிக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பல ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியவர் எஸ் ஜானகி. அவரது ஒரே மகன் முரளி கிருஷ்ணா (65) இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் பல்லேபட்லா கிராமத்தில் பிறந்தவர் எஸ்.ஜானகி. தனது 3 வயது முதல் பாடல்கள் பாடி வரும் இவர் 17 மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். சினிமாவில் பாடத் தொடங்கியதும் சென்னைக்கு குடி பெயர்ந்தார். 1959ல் ராம் பிரசாத் - ஜானகி திருமணம் நடைபெற்றது, 1997ல் ஜானகியின் கணவர் ராம் பிரசாத் காலமானார். இந்த தம்பதிக்கு பிறந்தார் முரளி கிருஷ்ணா.
சில படங்களில் நடித்திருக்கும் முரளிக்கு சென்னையைச் சேர்ந்த நடனக் கலைஞர் உமாவுடன் திருமணம் நடைபெற்றது. முரளி – உமா தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள். ஆனால் சில காரணங்களால் இந்த தம்பதியிடையே விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். முரளி தன் அம்மா ஜானகியுடன் ஐதராபாத்தில் வசித்து வந்த நிலையில் இன்று அதிகாலை உடல் நலக்குறைவு காரணமாக முரளி காலமானார். திரைத்துறையைச் சேர்ந்த பலரும் எஸ்.ஜானகிக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

