\
Jamura Rani
Jamura RaniSinger

'நான் சிரித்தால் தீபாவளி..' பழம்பெரும் பாடகி ஜமுனா ராணி காலமானார்! | Jamuna Rani

மணிரத்னம் இயக்கத்தில் இளையராஜா இசையில் 'நாயகன்' படத்தில் இடம் பெற்ற 'நான் சிரித்தால் தீபாவளி' பாடலைப் பாடியவரும் இவரே.
Published on

தென்னிந்தியத் திரையுலகின் பழம்பெரும் பாடகி ஜமுனா ராணி (88) நேற்று (ஜூலை 30) பெங்களூருவில் காலமானார். அவரது இறுதிச் சடங்கு நேற்று கல்லஹள்ளியில் நடந்தது. 1938ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் பிறந்த ஜமுனா ராணி அவரது 7ஆவது வயதில் 'தியாகய்யா' என்ற படத்தின் மூலம் திரையுலகில் பாடகியாக நுழைந்தார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 6,000 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார்.

1952இல் தமிழில் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தினர் தயாரிப்பில் வெளிவந்த 'கல்யாணி என்ற திரைப்படத்தில் 'சக்ஸஸ்' மற்றும் 'ஒன்னு ரெண்டு மூணு' என்று இரண்டு பாடல்கள் பாடி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் 'மகாதேவி' திரைப்படத்தில் சாவித்ரிக்காக இவர் பின்னணி பாடிய 'காமுகர் நெஞ்சில் நீதியில்லை' என்ற பாடல் இவருக்கு திரையிசைப் பயணத்தில் ஒரு திருப்பத்தைத் தந்தது.

தொடர்ச்சியாக, தமிழில் ’செந்தமிழ் தேன் மொழியாள்’, ’சின்னச் சின்ன சிட்டு’, ’உங்க மனசு ஒரு தினுசு’, ’யாரடி நீ மோகினி’, ’குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே’, ’மாமா மாமா’, ’ஓ தேவதாஸ்’, ’புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்’, ’பாட்டொன்று’ என இவர் பாடிய பல பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது. மணிரத்னம் இயக்கத்தில் இளையராஜா இசையில் 'நாயகன்' படத்தில் இடம் பெற்ற 'நான் சிரித்தால் தீபாவளி' பாடலைப் பாடியவரும் இவரே. 1992க்குப் பின்னர் பாடாமல் இருந்த ஜமுனா, இறுதியாக தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவான Varudu மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நடித்த Mithunam ஆகிய படங்களில் மட்டும் பாடினார். இந்திய திரையுலகில் பல மறக்க முடியாத பாடல்களை பாடிய ஜமுனா ராணி மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com