சிம்பு - சந்தானம் இணையும் படம் கை மாறுகிறதா? | Simbu | Santhanam
தமிழ் சினிமாவில் முக்கியமான காம்போ சிலம்பரசன் மற்றும் சந்தானம். இவர்கள் இருவரும் பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளனர். சந்தானம் ஹீரோவாக நடிக்க துவங்கிய பின்னர், மற்ற ஹீரோ படங்களில் காமெடி ரோலில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். ஆனால் சிம்பு மீது இருந்த நட்பின் காரணமாக `பார்க்கிங்' இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனின் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தில் அவரோடு இணைந்து நடிக்க சந்தானம் ஒப்புக் கொண்டார்.
டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் இந்தப் படம் சிம்புவின் 49வது படமாக அறிவிக்கப்பட்டு பல காலம் ஆகியும் துவங்கப்படவே இல்லை. இப்போது சிம்புவும் வெற்றிமாறன் இயக்கத்தில் `அரசன்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதனையடுத்து ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு. டான் பிக்சர்ஸ் படத்தில் இணையும் என எதிர்பார்க்கப்பட்ட சிம்பு - சந்தானம் காம்போ இப்போது ’அஸ்வத்’ படத்தில் இணையவுள்ளது என தகவல்கள் பரவி வருகின்றன.
சந்தானம் மற்றும் சிலம்பரசனின் `காதல் அழிவதில்லை', `மன்மதன்', `வல்லவன்', `காளை', `சிலம்பாட்டம்', `வானம்', ` ஒஸ்தி', `போடா போடி', `வாலு' ஆகிய படங்களில் இருவரும் இணைந்து நடித்து பெரிய வரவேற்பை பெற்றுள்ளனர். 2017இல் சந்தானத்தின் `சக்க போடு போடு ராஜா' படத்தில் இசையமைப்பாளராகவும் சிலம்பரசன் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இரு தினங்களுக்கு முன்னர் சிம்பு படத்தை விரைவிலேயே துவங்க உள்ளதை குறிப்பிடும்படி தன் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டிருந்தார் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து.

