விபரீதமான மொபைல் விளையாட்டு.. ஷகீலாவுக்கு ஏற்பட்ட நிலை! | Shakeela
பிரபல நடிகை ஷகிலா. இவருக்கு ஏற்பட்டுள்ள உடல்நல பாதிப்பு தற்போது பேசு பொருளாகியுள்ளது. நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்தியதால் ஏற்பட்ட பாதிப்பால் நடிகை ஷகிலா கழுத்தில் ஆபரேஷன் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். இது குறித்து ஷகீலா பகிர்ந்து கொண்ட போது "கைபேசியை அதிகப்படியாக பயன்படுத்தியதால், கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு கழுத்தில் பட்டை அணியுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஒரு பக்கமாக படுத்துக்கொண்டு நீண்ட நேரம் கைபேசியைப் பயன்படுத்தி வந்தேன். இதனால் எனது கழுத்தில் உள்ள நரம்புகள் பாதிக்கப்பட்டன. இதன் விளைவாக, நான் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டியிருந்தது. அதற்கு 3 லட்சம் ரூபாய் வரை செலவானது. இந்த சம்பவத்தால் செல்போன்களை அதிகமாகப் பயன்படுத்த வேண்டாம் என்று மக்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். மேலும் குழந்தைகளுக்கு கேட்ஜெட்களைக் கொடுக்க வேண்டாம்.
நான் எழுவதற்கும், சாப்பிடுவதற்கும் கூட அடுத்தவர் உதவி தேவைப்படுகிறது. தொடர்ந்து 4 மணி நேரம் என் மொபைலில் கேம்ஸ் விளையாடுவேன். டீ அல்லது காபி குடிக்க மட்டுமே எழுவேன். பிறகு மீண்டும் வந்து அதே விளையாட்டைத் தொடர்வேன். அதன்பிறகு, யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்ப்பேன். இந்த முறையற்ற உடல் நிலை மற்றும் அதிகப்படியான மொபைல் பயன்பாடு காரணமாக நான் இந்த நிலைக்கு ஆளாகியுள்ளேன். பணத்தை செலவழிப்பதை விட பெற்றோர்கள் தாங்க முடியாத வேதனையையும் அனுபவிக்க வேண்டிய சூழல் ஏற்படும்" என்றார்.
மொபைல் போன் இன்றி உலகமே இல்லை என்று உலவும் இளம் தலைமுறையினருக்கு ஷகீலாவின் இந்த நிலை ஒரு எச்சரிக்கை என பலரும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

