"நான்தான் செழியன்" - `பராசக்தி' படத்தைப் பாராட்டிய சீமான் | Seeman | Parasakthi | SK
சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கி வெளியான படம் `பராசக்தி'. சிவாவின் 25வது படமான இதில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா எனப் பலரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படத்தின் சிறப்புக் காட்சியை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்த்தார். படம் பார்த்த பின்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சீமான், "இதை ஒரு படமாகத்தான் பார்க்க வேண்டும். மொழிப் போராட்டத்தின் பேராவணம் இது அல்ல. மொழிப் போராட்ட உணர்வை எடுத்துக் கொண்டு கதை, திரைக்கதையைச் செய்திருக்கிறார்கள். அதற்குள் காதல், அண்ணன் - தம்பி இதை எல்லாம் வைத்திருக்கிறார்கள்.
இதில் நாம் பார்க்க வேண்டியது என்னவென்றால், ஒவ்வொரு தேசிய இனங்களுக்கும் மொழி என்பது உயிர், முகவரி, அடையாளம். அதிலும் இந்தியாவின் சிறப்பு என்பது வேற்றுமையில் ஒற்றுமைதான். இது பழமொழிகளைக் கொண்ட ஒன்றியம். அதில் அவரவர் மொழி அவரவருக்கு முக்கியம். அனைவருக்கும் ஒரே மொழி என்பதை ஏற்க முடியாது என்றுதான் புரட்சி வெடித்தது. அதை, இந்தப் படம் பிரதிபலிக்கிறது. எனக்கு நிறைவு என்னவென்றால், தமிழ்ப் படம் ஒன்றில் ’தமிழ் வாழ்க’ என்ற சத்தம் கேட்கிறது. அதிலும் என் தம்பி சிவா, இறுதியில் ’தமிழ் வாழ்க’ என கையை உயர்த்திச் சொல்லும்போது நானே சொல்வதுபோல்தான் இருந்தது. இறுதியில் மொழிப்போராளிகள் படத்தை எல்லாம் காட்டும்போது, இதை எல்லாம் காட்ட ஒரு படம் வந்திருக்கிறதே என தோன்றியது.
மொத்தத்தில் இந்தப் படம் சொல்வது ஒன்றுதான் ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் அவர் மொழி முக்கியம். விரும்பினால் எம்மொழியும் கற்போம். தேவைப்படும்போது கற்றுக்கொள்ளலாம். ஆனால், கட்டாயம் நீ படித்துத்தான் ஆக வேண்டும் என்பதை ஏற்க முடியாது. இதைத்தான் இப்படம் வலியுறுத்துகிறது. ஆனால் தமிழ் தலைமுறையினர், இதுதான் நம் மொழிப் போராட்டம் என எடுத்துக்கொள்ளக் கூடாது. அது தனி” என்றார்.
மேலும், ”செழியன் பாத்திரம் புனைவா அல்லது நிஜமாக இருந்த ஒரு நபரா” எனக் கேட்கப்பட, ”சீமான்தான் செழியன். பேரைச் செழியன் என வைத்துவிட்டார்களே தவிர, நான்தான் செழியன்" என்றார்.

