"சினிமாதான் வாழ்க்கை என நினைக்கிறார்கள்" - வேதனை தெரிவித்த எஸ்.ஏ சந்திரசேகர்| Ram Abdullah Antony
பூவையார் ஹீரோவோக நடித்து உருவாகியுள்ள படம் `ராம் அப்துல்லா ஆண்டனி'. இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய எஸ் ஏ சந்திரசேகர் "மேடையில் இருக்கும் அனைவரும் என் பிள்ளைகள் என சொல்லலாம். குறிப்பாக நண்பர் அகத்தியன். நாங்கள் எவ்வளவோ படம் இயக்கியிருக்கலாம், ஆனால் அகத்தியன் சாருடைய `காதல் கோட்டை' போல இத்தனை வருடங்களில் ஒரு ஆழமான காதல் கதையை யாருமே சொல்லவில்லை. பிரசாத் லேபில் அவரை சந்தித்து விஜய்க்கு ஒரு கதை சொல்லுங்கள் என கேட்டேன். அந்த வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கவில்லை. அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.
இப்போதைய டிரெண்ட் என்னவென்றால், சூப்பர்ஸ்டார்களை வைத்து படம் எடுத்தால், போட்ட பணத்தை எடுத்துவிடலாம் என நினைக்கிறார்கள். இப்போதெல்லாம் நல்ல கதைக்கு பணம் கொடுக்க ஆள் இல்லை. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் இயக்குநரை நம்பி 2.5 கோடி பணம் கொடுத்திற்கு நன்றி. இந்த நம்பிக்கை வெற்றி அடையும்.
இப்போதெல்லாம் சினிமா வேறு வாழ்க்கை வேறு என யாரும் பார்ப்பதில்லை. சினிமாதான் வாழ்க்கை என நினைக்கிறார்கள். சினிமாவில் நடப்பதை நாமும் செய்யலாம் என நினைக்கிறார்கள். பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கத்தி எடுத்து செல்கிறார்கள். நாம் அதற்கு ஆதரவு அளிக்கும் படி இருக்கக்கூடாது. வருங்கால சமுதாயம் நன்றாக இருக்க வேண்டும். அதற்கு இறைவன் கொடுத்திருக்கும் சக்தி வாய்ந்த ஊடகம் இந்த சினிமா. அதனை நல்ல விதமாக பயன்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.