பிரபல நடிகர் RS சிவாஜி காலமானார்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் முதன்மை தயாரிப்பாளர் (Line Producer), சவுண்ட் இஞ்சினியர், உதவி இயக்குநர் உட்பட பல நிலைகளில் பணியாற்றியிருப்பவர். பல படங்களில் நடித்திருந்தாலும், அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் , " நீங்க எங்கேயோ போயிட்டீங்க தெய்வமே" வசனம் மூலம் இன்றளவும் டிரெண்டில் இருந்தவர். இந்த வசனத்தை வைத்தே சில படங்களில் அதே மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். கிட்டத்தட்ட கமலின் எல்லா படங்களிலும், சந்தானபாரதியும், சிவாஜியும் ஏதோவொரு காட்சியில் வந்துவிடுவார்கள். மை டியர் மார்த்தாண்டன், சத்யா, மைக்கேல் மதன காமராஜன், குணா, அன்பே சிவம், உன்னைப் போல் ஒருவன், விக்ரம் என பல படங்களில் நடித்தவர். விருமாண்டி படத்தில் வரும் ' உன்ன விட ' பாடலில் வரும் காளையின் கழுத்து மணி ஓசை இவர் பதிவு செய்து வைத்திருந்தது என்பதுய் குறிப்பிடத்தக்கது. ஆபூர்வ சகோதரர்கள் காமெடியைப் போலவே, பிரபுவுடன் 'வாங்க ஏழைகளா' காமெடிக் காட்சியாலும், அன்பே சிவம் படத்தில் வரும் ' two to two to two two' காமெடி காட்சியாலும் இன்றளவிலும் மீம்களில் வருபவர்.
நயன்தாராவின் தந்தையாக கோலமாவு கோகிலா , சாய்பல்லவியின் தந்தையாக கார்கி என தற்போது சில படங்களில் நடித்துள்ளார். தமிழில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ள இவர், இந்த வாரம் வெளியான லக்கிமேன் படத்திலும் கார் டிரைவிங் ஆசிரியராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பழம்பெரும் துணை நடிகரும், தயாரிப்பாளருமான எம்.ஆர்.சந்தானத்தின் மகனான இவர், இயக்குநரும், நடிகருமான சந்தானபாரதியின் சகோதரர்.
சாய் பாபாவின் தீவிர பக்தரான இவர் இன்று காலை 11 மணி அளவில் காலமானார். சென்னை வளவசரவாக்கத்தில் உள்ள வீட்டில் , அவரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இவரின் மறைவுக்கு திரைத்துறையினர் அஞ்சலி செலுத்திவருகிறார்கள்.