\
மாரி செல்வராஜ்-உதயநிதி
மாரி செல்வராஜ்-உதயநிதி@Udhaystalin

வசூலை குவிக்கும் மாமன்னன்: சொகுசு கார் பரிசளித்த ரெட் ஜெயண்ட் - உதயநிதி நெகிழ்ச்சிப் பதிவு!

‘மாமன்னன்’ படத்தின் வெற்றியை அடுத்து இயக்குநர் மாரி செல்வராஜூக்கு ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் சொகுசு காரை பரிசளித்துள்ளது.
Published on

மாரி செல்வராஜ் இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான படம் ‘மாமன்னன்’. இப்படத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த 29 ஆம் தேதி வெளியான இப்படம் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம் மூன்றே நாட்களில், உலகம் முழுவதும் 28 கோடி ரூபாய் வசூலை அள்ளியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 22 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது.

மாரி செல்வராஜ்-உதயநிதி ஸ்டாலின்
மாரி செல்வராஜ்-உதயநிதி ஸ்டாலின்

இந்நிலையில் இப்படம் வெற்றியடைந்ததை அடுத்து இயக்குநர் மாரி செல்வராஜூக்கு ‘மாமன்னன்’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவீஸ், மினி கூப்பர் காரை பரிசாக அளித்துள்ளது.

கார் பரிசளிக்கும்போது உடனிருந்த உதயநிதி, தனது ட்விட்டர் பக்கத்தில் அப்புகைப்படங்களை பகிர்ந்து, “ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விவாதிக்கிறார்கள். தங்களுடைய எண்ணங்களை கதையுடனும் களத்துடனும் தொடர்புப்படுத்தி கருத்துக்களை பகிர்கிறார்கள். உலகத் தமிழர்களிடையே விவாதத்துக்குரிய கருப்பொருளாக மாறியிருக்கிறது.

அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற நம் தலைவர்கள் ஊட்டிய சுயமரியாதை உணர்வை, சமூகநீதி சிந்தனைகளை இளம் தலைமுறையினரிடம் விதைத்துள்ளது. வணிக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி. இதற்காக ரெட் ஜெயண்ட் நிறுவனம் மாரி செல்வராஜுக்கு சாருக்கு மினி கூப்பர் கார் வழங்கி மகிழ்ந்தது. உலகம் முழுவதும் பறக்க ‘மாமன்னன்’-க்கு றெக்கை அளித்த என் மாரி செல்வராஜ் சாருக்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

உதயநிதி ட்விட்டர்
உதயநிதி ட்விட்டர்

ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் பரிசளித்துள்ள இந்த கார் மினி கூப்பர் கண்ட்ரிமேன் கார் எனக் கூறப்படுகிறது. இதன் மதிப்பு 47 லட்சம் என்றும், ஆன் ரோடு மதிப்பு 52 லட்சம் வரை இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com