ரவி மோகனுக்கு தேவி ரத்னா விருது! | Ravi Mohan | Devi Ratna Award | Utsav 2026
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரவி மோகன். இவருக்கு பாலக்காட்டில் பல்லாஸனா பழையகாவு ஸ்ரீமீன்குளத்தி பகவதி அம்மன் கோயிலில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. பாலக்காட்டில் பல்லாஸனா பழையகாவு ஸ்ரீபகவதி அம்மன் தேவஸ்தானம் நிறுவியுள்ள தேவி ரத்னா விருது, கலை, கலாசாரம் மற்றும் சமூக வாழ்க்கையில் சிறப்பான பங்களிப்பு செய்தவர்களுக்கு வழங்கப்படும் உயரிய கௌரவமாகும்.
இந்த ஆண்டு, ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் அவர் வெளிப்படுத்திய சிறப்பான நடிப்பு, தமிழ் சினிமாவிற்கான அவரது முக்கியப் பங்களிப்பு மற்றும் ரசிகர்களிடையே பெற்றிருக்கும் பேராதரவை முன்னிட்டு ரவி மோகன் தேர்வு செய்யப்பட்டார். இந்த விருதில் ₹1,00,001 பணப் பரிசு, தங்கச் சின்னம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவுப் பலகை ஆகியவை இடம்பெற்றன.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு விருதைப் பெற்றுக்கொண்ட ரவி மோகன், கோயிலின் ஆன்மிகச் சூழல் குறித்தும் பல்லாஸனா பழையகாவு பகவதி அம்மன் தேவஸ்தானம் அமைப்பின் பாரம்பரியப் பெருமை குறித்தும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். அவரது உரை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த விழாவில் தன்னுடைய இசை நிகழ்ச்சியையும் நடத்தினார் பாடகி கெனீஷா.

