"மகனின் இழப்பு அவரை பாதித்து.." - வேதனையுடன் பேசிய ரமேஷ் கண்ணா | Ramesh Kanna | Bharathiraja
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா (84), கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார். அவருடைய மறைவுக்கு பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியபின் பேசிய நடிகர் ரமேஷ் கண்ணா, "அவர் இவ்வளவு சீக்கிரம் இறக்க வேண்டிய நபர் அல்ல, அவர் மகனின் இறப்புதான் இந்த அளவு பாதித்துள்ளது என நினைக்கிறேன். இப்போது இருக்கும் சினிமாவில் நடிகர், இயக்குநர், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் வேர் அவர்தான்.
அங்கிருந்து வந்தவர்கள்தான் நாங்கள் எல்லோருமே. முன்பெல்லாம் இயக்குநர் என்பது பெரிய விஷயமாக இருக்கும். ஆனால், அதை எல்லாம் உடைத்து யார் வேண்டுமானாலும் படம் இயக்கலாம் என்பதை உருவாக்கியவர் அவர். ’பதினாறு வயதினிலே’ மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்த படம். அவர் படங்கள் எல்லாமே மனதைத் தொடும் விதத்தில் இருக்கும். குறிப்பாக, சொல்வதானால் ’முதல் மரியாதை’. சிவாஜி சாரிடமிருந்தே வேறு விதமான நடிப்பைக் கொண்டு வந்தவர் பாரதிராஜா. அந்தக் காலத்தில் நடிகராக ஆசைப்பட்டால் ஸ்ரீதர் படத்தில் நடிக்க விரும்புவார்கள். அதன் பின்னர் இருந்தது பாலசந்தர், பாரதிராஜாதான். பாரதிராஜா சாரிடம் உதவி இயக்குநராக சேர விரும்பினேன். ஆனால் அவரிடம் நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்தது படைப்பாளிகள் வேலை நிறுத்தம் நடந்த சமயத்தில்தான். அப்போது அனைவருக்கும் ஒரே நம்பிக்கை, தைரியம் அவர்தான்" என்றார்.

