புதுப்பேட்டை 2 கதை 50% ரெடி... தனுஷ் ஏன் படம் இயக்குகிறார்? - செல்வராகவன் | Selvaraghavan | Dhanush
விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள `ஆர்யன்' அக்டோபர் 31ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் செல்வராகவன் வில்லன் ரோலில் நடித்துள்ளார். இப்படத்திற்காக செல்வராகவன் அளித்திருக்கும் பேட்டிகளில் தனது அடுத்த படம் பற்றியும், நடிகர்கள் இயக்குநர் ஆவது பற்றியும் பதில் அளித்திருக்கிறார்.
"உங்களின் பல படங்களின் 2ம் பாகத்தை பலரும் எதிர்பார்க்கிறார்களே. அதை எப்படி பார்க்கிறீர்கள்?"
"ரத்னம் சார் `7ஜி ரெயின்போ காலனி' பார்ட் 2 செய்யலாமா எனக் கேட்ட போது, அந்த சவால் எனக்குப் பிடித்தது. அனிதா இறந்து போனாலும் கூட கதிர் பாத்திரம் உயிரோடு இருக்கிறார். அந்தப் பெண்ணின் நினைவுகளோடு இருக்கிறார். இனி என்ன செய்வார் என்ற கேள்வி வந்தது. பத்து வருடங்களாக அந்த பெண்ணின் நினைவுகளோடே இருக்கும் அந்த காவியக் காதல் எல்லாம் இப்போது சாத்தியம் இல்லை. Life must move on என்பதை சொல்லும் படமாக `7ஜி ரெயின்போ காலனி' பார்ட் 2 இருக்கும். `7ஜி ரெயின்போ காலனி 2', `மெண்டல் மனதில்' இரண்டு படங்களும் 60 சதவீதம் நிறைவடைந்துவிட்டது. மேலும் பார்ட் 2 என்பது நான் முடிவு செய்து உடனடியாக எடுக்க கிளம்பு முடியாது. பலருக்காக காத்திருக்க வேண்டி இருக்கும். அதே சமயம், கவனமாக செய்தோமா, தற்செயலாக அமைந்ததா எனத் தெரியவில்லை. அந்தப் படங்கள் (புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன்) முடியும் போது வேறொரு பாத்திரத்தின் மீதே முடிந்திருக்கிறது. கார்த்தி மேலோ, தனுஷ் மீதோ அது முடிந்திருக்காது. எனவே யாரை வைத்தும் எடுக்கலாம். ஆனால் ஸ்க்ரிப்ட் முடிய வேண்டும். `புதுப்பேட்டை 2' கதை 50 சதவீதம் தயாராகிவிட்டது, `ஆயிரத்தில் ஒருவன் 2' எழுதிக் கொண்டிருக்கிறேன்."
"இப்போதெல்லாம் இயக்குநர்கள் நடிகர்கள் ஆகிறார்கள், நடிகர்கள் இயக்குநர் ஆகிறார்கள். அதை எப்படி பார்க்கிறீர்கள்?"
"ஒரு இயக்குநராக இருக்கும் போதும் நடிகர்களுக்கு சொல்லும் போது நாங்களும் நடித்து காண்பிப்போம். ஆனால் நடிகர்கள் ஏன் இயக்குகிறார்கள்? ஜாலியாக நடித்து விட்டு போக வேண்டியதானே. நான் தனுஷை தான் சொல்கிறேன். அவர் மகிழ்ச்சியாக நடிக்கலாமே, இயக்குநர் என்றால் ஆயிரம் விஷயம் யோசிக்க வேண்டும், நடிப்பிலும் இருக்கும். ஆனால் வலி குறைவு." என்றார்

