Pradeep Ranganathan
Pradeep RanganathanDude

SHORT FILM to STAR| பிரதீப்பின் சினிமா பயணம்! தொடர் வெற்றியின் ரகசியம்? | Pradeep Ranganathan | Dude

ஒன்று பிரதீப்பே சொல்வது போல, அவர் இப்போது உள்ள இளைஞர்களை பிரதிபலிக்கும் ஒரு எதார்த்தமான தோற்றத்தோடு இருப்பது, அதற்குள்ளாகவே ஒரு ஸ்டைலை வடிவமைப்பது. இரண்டாவது தனக்கு ஏற்றவாறு கதையை தேர்வு செய்து நடிப்பது.
Published on

பிரதீப் ரங்கநாதன்... இயக்குநராக அறிமுகமாகி இன்று ஒரு நட்சத்திரமாக பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம். இப்போது இவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் `டியூட்' படம் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. இந்த அசாத்திய வளர்ச்சி சாத்தியமானது எப்படி?

பிரதீப்பின் துவக்கம் பலரையும் போல குறும்படங்களில் துவங்கியது தான். கல்லூரியில் குறும்படங்கள் இயக்கி பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தவரின் வாழ்க்கை, Movie Buffகாக எடுத்த ஒரு குறும்படத்தின் மூலம் மாறியது. கல்லூரி முடித்தும் வேலைக்கு சென்றுகொண்டே குறும்படங்கள் இயக்கிக் கொண்டிருந்தவர், வேலையை விட்டு முழு நேரமாக சினிமாவை கையில் எடுத்தார். அப்போது அவர் இயக்கியிருந்த `அப்பா லாக்' குறும்படம் Movie Buff குறும்பட போட்டியில் முதல் பரிசு வென்றிருந்தது. நண்பர் ஒருவரின் மூலம் தயாரிப்பாளர் ஐசரி கணேஷை சந்தித்து கதை சொல்லும் வாய்ப்பு அமைய, அவர் மூலம் ஜெயம் ரவி சந்திப்பு, அதன் மூலம் `கோமாளி' படம் உருவானது.

முதல் படமே மிகப்பெரிய ஹிட், இயக்குநராக அடுத்து அவர் என்ன செய்வார் என எல்லோரும் எதிர்பார்க்க தானே ஹீரோவாக நடித்து ஒரு படம் இயக்கும் படத்தோடு வந்தார். ஆரம்பத்தில் இருந்தே நடிகராக முயற்சியில் இருந்த பிரதீப், முதலில் இயக்குநராக தன்னை நிரூபித்துவிட்டு, பின்பு தன்னுடைய நடிப்பு ப்ளானை நிறைவேற்ற திட்டமிட்டார். பல தயாரிப்பு நிறுவனங்கள் படத்தை தயாரிக்க தயாராக இருந்தாலும் பிரதீப் ஹீரோ என சொன்னதும் பேக் அடித்தார்கள்.

ஆனால் பிரதீப்பின் திறமையை புரிந்து கொண்ட ஏ ஜி எஸ், அவர் மீது நம்பிக்கை வைத்து ஹீரோவுக்கு பச்சை கொடி காட்டியது. எந்தக் குறும்படம் பிரதீப்புக்கு பரிசு பெற்று தந்ததோ, அதே குறும்படம் பிரதீப்பின் ஹீரோ பயணத்தையும் துவங்கி வைத்தது. அவர் இயக்கிய `அப்பா லாக்' குறும்படத்தை தான், `லவ் டுடே' என்ற பெயரில் படமாக இயக்கினார். பிரதீப் எதிர்பார்த்ததை விட படத்திற்கும், ஒரு ஹீரோவாக அவருக்கும் பெரிய வரவேற்பு கிடைத்தது. அதற்கு பின் NO LOOKING BACK. `டிராகன்' மாபெரும் ஹிட், இப்போது `டியூட்' Table Profit உடன் தான் ரிலீஸே ஆகி இருக்கிறது.

Pradeep
PradeepDragon

பிரதீப்புக்கு இளைஞர்கள் மத்தியில் எப்படி இவ்வளவு வரவேற்பு?

இதற்கு முக்கியமாக இரண்டு காரணங்களை சொல்லலாம். ஒன்று பிரதீப்பே சொல்வது போல, அவர் இப்போது உள்ள இளைஞர்களை பிரதிபலிக்கும் ஒரு எதார்த்தமான தோற்றத்தோடு இருப்பது, அதற்குள்ளாகவே ஒரு ஸ்டைலை வடிவமைப்பது. மேலும் ஒவ்வொரு பாத்திரத்திலும் பொருத்தமான நடிப்பை கொடுப்பது. இரண்டாவது தனக்கு ஏற்றவாறு கதையை தேர்வு செய்து நடிப்பது.


முதலில் பிரதீப் நடிப்பு பற்றி பார்க்கலாம். இவர் தான் தலைசிறந்த நடிகர் என்ற அளவில் இதனை எடுத்துக் கொள்ளாமல், ஒரு பெரிய கூட்டத்தை கவனிக்க வைக்கும் திறமை பிரதீப்புக்கு கை கூடியிருக்கிறது எனப் புரிந்து கொள்ளலாம். பொதுவாக பிரதீப்பிடம் தனுஷ், எஸ் ஜே சூர்யா, பிரபுதேவா ஆகியோரின் தாக்கம் அதிகம் இருப்பதை நம்மாள் கவனிக்க முடியும். அதைத் தாண்டி எமோஷனலான காட்சி - காமெடியான காட்சி இவை இரண்டையும் மிக சிறப்பாக அவரால் வெளிப்படுத்த முடிகிறது. பார்வையாளர்களை மிக எளிமையாக கவரக்கூடிய இரண்டு முக்கியமான காரணிகள் இவை.

மாஸ் காட்சியில் ஸ்லோமோஷனில் நடப்பது, அதிரடி சண்டைகள் செய்வதை விட எமோஷன் + காமெடி ஒரு நடிகருக்கு நன்றாக வந்துவிட்டால் ஆடியன்ஸிடம் ஸ்பெஷல் இடம் கிடைத்துவிடும். பிரதீப் நடித்துள்ள மூன்று படங்களிலும் அவர் நெருக்கடிக்கு உள்ளாகும் காட்சி இடம்பெற்றிருக்கும். அதில் அவர் கொடுக்கும் ரியாக்ஷன் எல்லாம் எஸ் ஜே சூர்யாவை நினைவுபடுத்துவது போல இருந்தாலும், அந்த சாயலை மீறி பிரதீப் தனித்துவமாக தெரிவார். குறும்பாக அவர் செய்யும் ஒவ்வொரு விஷயங்களிலும் பிரபுதேவா வெளிப்படுவதையும் நம்மால் கவனிக்க முடியும். இது ஒரு நடிகராக பிரதீப் மக்களுக்கு பிடிக்க காரணமாக இருக்கலாம்.

அடுத்தது கதைகளை தேர்வு செய்வது. அவரே ஒரு இயக்குநர் என்பதால் இந்த ப்ராசஸ் அவருக்கு சிக்கல் இல்லை எனத் தோன்றுகிறது. அவரது படங்களில் சொல்லப்படும் விஷயங்களில் நமக்கு மாற்று கருத்துக்கள் இருந்தாலும் கூட, நம்மையும் அதனை ரசிக்க வைப்பது இதில் முக்கியமாக சொல்ல வேண்டிய ஒன்று. அதன் மீதான நமது விமர்சனங்கள் எல்லாம் படம் முடிந்த பின் தான், அதுவரை என்டர்டெய்ன்மென்ட் மிஸ் ஆகாது. இன்னொன்று இதுவரை அவர் நடித்த மூன்று படங்களும் காதல் சார்ந்து நடக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தியதே.

`லவ் டுடே' காதலர்கள் தங்கள் மொபைலை மாற்றிக் கொண்ட பின் நடக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தியது. `டிராகன்' தன் வருங்கால துணையை இழக்க கூடாது என அவர் எடுக்கும் முயற்சிகளை மையப்படுத்தியது. `டியூட்' தான் காதலித்த பெண்ணுக்காக காதலன் எடுக்கும் ரிஸ்க்கை மையப்படுத்தியது. ஆனால் ஒவ்வொன்றும் வெவ்வேறு படங்களாக, முற்றிலும் வித்தியாசப்பட்ட படங்களாகவே இருக்கும். இன்னும் சொல்லப்போனால் அவரின் அடுத்த படம் LIK கூட காதல் படம் தான். அதுவும் எதிர்காலத்தில் நடப்பது போன்ற ஒரு புதுமையுடன் உருவாகியிருக்கிறது.

Pradeep
PradeepLove Today, Dude, Dragon

பிரதீப் ஒரு ஸ்க்ரிப்ட் ரைட்டர் என்பதால், சுவாரஸ்யமாக களங்களை அடையாளம் காண்கிறார். அதற்குள் தான் எப்படி பொருந்துவது என்பதிலும் மெனக்கெடுகிறார். இன்னொரு முக்கியமான விஷயம், இயக்குநர் சொல்லும் கதையில் நடிக்க தயாராக இருக்கிறார். இது சம்பந்தப்பட்ட இரு உதாரணங்களை சொல்லி இந்த தொகுப்பை நிறைவு செய்யலாம். முதலாவது இப்போது வெளியான `டியூட்' படத்தில் நடந்தது. `டியூட்' கதை பிரதீப்புக்கு பிடித்திருந்தாலும், அதில் ஹீரோ செய்யக்கூடிய விஷயங்களால், அவரை மக்கள் ஒரு ஜோக்கர் போல பார்த்து விடுவார்களோ என்ற குழப்பம் வந்திருக்கிறது. ஆனால் கதை மேலும், இயக்குநர் மேலும் நம்பிக்கை வைத்து படத்தில் நடித்திருக்கிறார். இப்போது அந்த நம்பிக்கை வென்றுவிட்டது.

இன்னொரு உதாரணம் `டிராகன்'. இப்படத்தின் அடிப்படை கதை பிரதீப் எழுதியது. அந்த கதையில் ஒரு இளைஞன் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைதாகிறான். அவனுக்கு இரண்டு வாய்ப்புகளை கொடுக்கிறார் நீதிபதி. ஒன்று சிறைக்கு செல்ல வேண்டும், இல்லை என்றால் கல்லூரிக்கு சென்று அவர் வைத்துள்ள அரியர் எல்லாம் எழுதி பாஸ் ஆக வேண்டும். இதுதான் பிரதீப் எழுதிய கதையில் இண்டர்வெல். இதனை இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மாற்றுகிறார். நீதிபதி என்பதில் பார்வையாளர்களுக்கு எந்த நெருக்கமும் இருக்காது, எனவே அதனை கல்லூரி முதல்வர் என மாற்றுகிறார். லாஜிக் பக்காவாக செட் ஆகிறது. தான் எழுதிய கதையை இயக்குநர் மாற்றுவதில் இருக்கும் நியாயம் சக இயக்குநராக பிரதீப்புக்கு புரிகிறது. அஷ்வத் செய்த மாற்றத்துடன் படம் உருவாகிறது. மிகப்பெரிய ஹிட் ஆகிறது டிராகன். இப்படி மிக கவனமாக ஒரு நடிகராகவும், இயக்குநராகவும் இயங்கும் பிரதீப் ரங்கநாதன் இந்த வெற்றிக்கு தகுதியானவர் என்றே சொல்லலாம். அவரின் இப்போதைய `டியூட்' வெற்றிக்கும், இனி வரும் அவரது சினிமா பயணத்திற்கும் வாழ்த்துகளை சொல்லிக் கொள்வோம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com