"என் குரு பிரதீப் ரங்கநாதனுக்கு நன்றி!" - இயக்குநர் சுபாஷ் கே ராஜ் | Subhash K Raj | Blast
அர்ஜூன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கியுள்ள படம் `ப்ளாஸ்ட்'. இப்படம் மே 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் அர்ஜூன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் உட்பட படக்குழுவினரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் சுபாஷ் கே ராஜ், ''இது என்னுடைய முதல் மேடை. என்மீது நம்பிக்கை வைத்து திரையுலகில் பணியாற்ற அனுமதித்த பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றி. இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு என்னுடைய சிறப்பு நன்றி. அவர்தான் என்னுடைய திரையுலக குரு. அவருடைய 'லவ் டுடே' படத்தில் பணியாற்றினேன். அதன்பிறகு கதை எழுதி அவரிடம் சொன்னபோது, அவர்தான் ஏஜிஎஸ் நிறுவனத்தில் கதை சொல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். ஐஸ்வர்யா கல்பாத்தி - அர்ச்சனா கல்பாத்தி- அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் அகோரம் சாரிடம் கதையைச் சொன்னேன். கதையைச் சொல்லி முடித்ததும், இந்தப் படத்தை நிச்சயமாக தயாரிக்கிறோம் என்றார். அந்தத் தருணம் என்னால் மறக்க முடியாது. இதற்காக ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நன்றி.
இந்தப் படத்தை எந்த இடத்திலும் சமரசம் எல்லாம் முழுச் சுதந்திரத்துடன் உருவாக்கியிருக்கிறேன். இதற்காக மீண்டும் ஒருமுறை ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய முதல் படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இதற்காகவே நான் பெருமிதம் அடைகிறேன். அவருக்கு நன்றி. அபிராமி- ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட ஒவ்வொரு நட்சத்திரங்களும் இந்தப் படத்தில் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். ஒளிப்பதிவாளர் - இசையமைப்பாளர்- படத் தொகுப்பாளர் -சண்டைப் பயிற்சி இயக்குநர் - என ஒவ்வொருவரும் தங்களுடைய அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பைப் புதுமுக இயக்குநரான எனக்கு வழங்கியதற்கு நன்றி.
'பிளாஸ்ட்' ஆக்ஷன் படம்தான். ஆனால் குடும்பத்துடன் அனைவரும் பார்த்து மகிழும் வகையில் இருக்கும். படத்தைப் பார்க்கும்போது எல்லா அப்பாக்களும் படத்துடன் தங்களைத் தொடர்புபடுத்திக் கொள்வார்கள். நம் குடும்பம் என்பதை உணர்வீர்கள்.
சமூகத்திற்குத் தேவையான பல விஷயங்களைச் சொல்லி இருக்கிறோம். ஆனால், அதனை பிரசாரமாக சொல்லாமல் கதையுடன் சுவாரசியமாகச் சொல்லி இருக்கிறோம். அனைவரும் மே 28ஆம் தேதி அன்று திரையரங்கத்திற்கு வருகை தந்து இந்தப் படத்தைப் பார்த்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

