
விஜய் மக்கள் இயக்கம் சார்பில், தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதி வாரியாக 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணாக்கர்களுக்கு கடந்த மாதம் சென்னை நீலாங்கரையில், பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகைகளை நடிகர் விஜய் வழங்கி, அவர்களுக்குப் பாராட்டு தெரிவித்தார். இந்த விழாவில் பேசிய மாணவ, மாணவிகளிடையே உரையாடிய அவர், “முடிந்தவரை படியுங்கள்; எல்லாத் தலைவர்களையும் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். அம்பேத்கர், பெரியார், காமராஜர் ஆகியோரைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்ளுங்கள்; மற்ற விஷயங்களை விட்டு விடுங்கள்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தான், செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், நடிகர் விஜய், தலைவர்களைப் பற்றிப் பேசினால் மட்டும் போதாது, அவர்களுடைய கொள்கைப்படி நடந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் தமிழக அரசு மற்றும் ஆளுநர் உடனான இந்த மோதல் போக்கு தமிழகத்தின் வளர்ச்சியை பாதிக்கும் எனவும் கூறியுள்ளார். வரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக வியூகம் அமைக்க முதற்கட்டமாக, விழுப்புரம், ஆரணி, காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்ட பாமக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் ஆலோசனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.