"பருத்திவீரனில் நடிக்காததற்கு காரணம்..." - உண்மையை உடைத்த பசுபதி | Pasupathy | Paruthiveeran
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ், பசுபதி, லால், அமீர், அனுபமா, ரஜிஷா ஆகியோர் நடித்து வெளியான படம் `பைசன்'. இப்படத்திற்கு பரவலான பாராட்டுகளும், வரவேற்பும் கிடைத்து வருகிறது. இதனை தொடர்ந்து இப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பசுபதி, இப்படத்தின் முந்தைய நிகழ்வு ஒன்றில் அமீர் கேட்ட கேள்விக்கு பதில் கூறி இருந்தார்.
`பைசன்' படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் பருத்திவீரன் படத்தில் சரவணன் நடித்த சித்தப்பு கதாபாத்திரத்தில் பசுபதிதான் நடிக்க வேண்டும் என நினைத்து வைத்திருந்தேன். ஆனால் அவரை என்னால் அப்போது நடிக்க வைக்க முடியவில்லை எனக் கூறி இருந்தார். இந்த விஷயத்தை குறிப்பிட்டு பேசிய பசுபதி "அமீர் சாருடன் நான் நிறைய பேசியதில்லை. படத்திலும் எனக்கும் அவருக்குமான காட்சிகள் இல்லை, எனவே அங்கும் பேச முடியவில்லை. ஆனால் அவருக்கு ஒரு பதில் சொல்ல வேண்டும் என நினைப்பேன் ஆனால் விட்டுவிடுவேன். இப்போது அதை சொல்ல வேண்டும் போல தோன்றுகிறது.
அவரது பருத்திவீரன் படத்தில் என்னை நடிக்க (சித்தப்பு பாத்திரத்தில்) அணுகியதையும், அது நாடக்காமல் போனதையும் ஒரு மேடையில் கூறியிருந்தார். அவர்கள் என்னை அணுகியது உண்மை தான். ஆனால் அவர்கள் என்னை கேட்ட நாள், `வெயில்' படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் இருந்தேன். ஒன்றரை மாதம் தொடர்ந்து படப்பிடிப்பு. இடையில் ஏதாவது கேப் கிடைத்தால் பார்க்கிறேன் என சொல்லி இருந்தேன். இல்லை அடுத்த வாரம் நீங்கள் படப்பிடிப்பு வர வேண்டும், இரண்டு மாதம் ஷூட் இருக்கிறது என்றார்கள். எனவே என்னால் முடியாது என கூறினேன். இதுதான் உண்மை." என்று கூறினார்.

