' நான் தனுஷிடம் கேட்டது ஒன்று தான்..' வழக்கு குறித்து நயன்தாரா ஓப்பன் டாக்..!
தனுஷுக்கும், நயன்தாராவுக்குமான பிரச்னை நீதிமன்றம் வரை சென்றுவிட்டது. ஒரு காலத்தில் தனுஷ் தயாரிப்பில் பணம் வாங்காமலே பாடல் ஒன்றுக்கு நடனமாடிய நயன்தாரா தற்போது அவரை பொதுவெளியில் காட்டமாக விமர்த்திருக்கிறார். தனுஷும் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். இவர்களுக்குள்ளான பிரச்னை கடிதங்கள் வழியாக பொதுவெளிக்கு வந்துகொண்டிருந்த நிலையில், தற்போது முதல்முறையாக மௌனம் கலைத்திருக்கிறார் நயன்தாரா.
The Hollywood Reporter Indiaவுக்கு அளித்த பேட்டியில், தனுஷ் பற்றிய கடிதமும், அதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சையும் பற்றி நயன்தாரா கூறியவை...
இது ஒரு சர்ச்சையாக அமைந்திருக்க வேண்டியதில்லை. அதுவும் எங்களது படத்தை (Nayantara Beyond the Fairy Tale) வெளியிட இரண்டு மூன்று நாட்களே இருந்த நேரத்தில் அது நடந்திருக்க வேண்டியதில்லை. லீகல் நோட்டீஸ் அனுப்பப்பட்டதும் அந்த நேரமாக அமைந்தது, அதற்கான எதிர்வினையை இப்படி ஆற்றலாமா என்பதை முடிவு செய்யவே சில நாட்கள் எடுத்துக் கொண்டோம். ஆனால் எதற்காக எனக்கு சரி எனப்படுவதை செய்ய தயங்க வேண்டும்? உண்மையை பேச நான் ஏன் பயப்பட வேண்டும்? வெறும் விளம்பரத்துக்காக ஒருவரது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் ஆள் நான் அல்ல. இதை ஏன் சொல்கிறேன் என்றால், இந்த விஷயத்தில் பலர் எங்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். அதே போல அவரது ரசிகர்களும், நலம் விரும்பிகளும் அவருக்கு ஆதரவளித்தனர். ஆனால் இதை எங்களது படத்தின் விளம்பரத்திற்காக செய்தோம் என அவர்கள் சொல்வதை மறுக்கிறேன். அது எங்கள் நோக்கம் அல்ல. மேலும் இது ஒரு படத்தைப் போல பார்க்கக் கூடியது அல்ல, அது ஒரு ஆவணப்படம். அது ஒரு நபரைப் பற்றியது. உங்களுக்கு அவரை பிடிக்கவோ, அவரை தெரிந்து கொள்ளவோ நீங்கள் அதைப் பார்த்தால் தான் முடியும். அதை ஹிட் - ஃப்ளாப் என்ற கடத்துக்குள் சுருக்க முடியாது. இந்த சர்ச்சை நான் பேசியதால் எழுந்தது. ஆனால் நான் பேசுவதற்கு முன்பு, அவரை தொடர்பு கொள்ள முயன்றேன், என்ன பிரச்சனை என அறிய முற்பட்டேன். பல முறை, பலர் மூலமாக முயன்றும் எங்களால் அவரை தொடர்பு கொள்ள இயலவில்லை. ஒரு கட்டத்தில் அந்த வீடியோ வேண்டாம் என்ற முடிவுக்கே கூட நானும் விக்னேஷும் வந்துவிட்டோம் அது அவரது படம், NOC தராதது அவரது விருப்பம். அதன் பின் அப்பட பாடலில் இருந்து நான்கு வரிகளை மட்டும் பயன்படுத்த நினைத்தோம். விக்னேஷ் சிவன் எழுதிய அந்த வரிகள் எங்களுக்கு மிகவும் பர்சனலானது. எங்கள் வாழ்க்கையை, காதலை, பிள்ளைகளை பிரதிபலிக்க கூடியதாக இருந்தது.
பொதுவாக யாரையும் அழைத்து எனக்கு இது வேண்டும் என தொந்தரவு செய்வது எனக்கு பிடிக்காது. ஆனால் இந்த நான்கு வரிகள் விஷயத்தில் நான் அழைத்து பேசுவதே முறையாக இருக்கும் என நினைத்தேன். மேலும் நாங்கள் பிறவி எதிரிகள் கிடையாது, நண்பர்களாக பயணித்தவர்கள் தானே. ஆனால் கடந்த 10 வருடங்களில் இது எப்படி மாறியது எனத் தெரியவில்லை. நான் அவரது மேலாளரை தொடர்பு கொண்டு நீங்கள் NOC கொடுக்கவில்லை என்றால் பரவாயில்லை, எங்களுக்கு அந்த நான்கு வரிகள் மிக முக்கியமானவை. அதையும் தர முடியாது என்பதை கூட ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அவரிடம் பேச ஒரு சந்தர்ப்பம் தாருங்கள். அதில் என்ன பிரச்சனை? எங்கள் மீது எதுவும் கோபமா? என்பதை குறித்து உரையாட தான். எதுவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக? இதை சரி செய்ய வேண்டும் என நினைத்தேன். பின்னாளில் எங்காவது சந்திக்கும் போது ஹாய், ஹலோ சொல்லும் அளவுக்காவது இருக்க வேண்டும். இதைத்தான் விரும்பினேன், முயற்சித்தேன். ஆனால் அதுவும் நடக்கவில்லை என்ற போது, அவர் மேல் கோபம் வந்தது. எனவே அவரின் எந்த விஷயத்தையும் நாங்கள் பயன்படுத்தவில்லை. அதனால் எங்கள் டிரெய்லரில் படப்பிடிப்பில் எங்கள் மொபைலில் எடுத்த காட்சிகளையே பயன்படுத்தினோம்.
BTS எல்லாம் இப்போது தான் காண்ட்ராக்டில் வருகிறது. இது பத்து வருடத்திற்கு முந்தைய படம். ஆனால் டிரெய்லர் வந்த போது அவர் அல்லது அவர் சார்ந்தவர்கள் செய்தது சரியானது அல்ல. சமூகத்தில் மதிக்கப்படும் நேசிக்கப்படும் ஒரு நபர், அதே மதிப்போடும் அன்போடும் நாங்களும் பார்க்கும் நபர் அப்படி நடந்து கொண்ட போது, நான் பேச வேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்கான தைரியம் என்னிடமிருந்த உண்மையில் இருந்து வந்தது. நான் இல்லாத ஒன்றை திரித்துக் கூறும் போதுதான் பயப்பட வேண்டும். ஆனால் நான் அதை செய்யவில்லை. ஒரு வேளை நான் இதை செய்திருக்கவில்லை என்றால், இதன் எல்லை இன்னும் அதிகமாகி இருக்கும். மேலும் அதற்கு ஆதரவு வந்தது, சினிமாவில் இருக்கும் பெண்கள் துணை நின்றனர். பொதுவாக நமது துறையில் என்ன நடக்கிறது என தெரிந்தாலும் பெண்கள் பேசக்கூடாது எனவே சொல்லி வந்தனர். ஆனால் பேச வேண்டிய நேரத்தில் பேச வேண்டும்.