"என்னுடைய அடுத்த படம்..." - SK கொடுத்த அப்டேட் | Sivakarthikeyan
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவர் சிவகார்த்திகேயன். இவரின் 25வது படமாக சமீபத்தில் வெளியானது `பராசக்தி'. சிவகார்த்திகேயன் நடித்த முதல் படமான `மெரினா' படம் பிப்ரவரி 3ம் தேதி வெளியானது. எனவே சினிமாவில் அவர் அறிமுகமாகி 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இன்று திருச்செந்தூர் கோவிலுக்கு குடும்பத்துடன் வந்திருந்தார் சிவகார்த்திகேயன்.
இங்கு செய்தியாளர்களை சந்தித்த சிவா "சினிமாவில் 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஒவ்வொரு வருடம் கூடும் போதும் பொறுப்புகள் அதிகரிக்கிறது. உங்கள் எல்லோரின் அன்புக்கும் ரொம்ப நன்றி. இந்த பயணத்தில் நிறைய கஷ்டங்கள் போராட்டங்கள் இருந்தாலும் மக்களின் அன்பையே பிரதானமாக நினைக்கிறன். அதற்காக இன்னும் உழைக்க வேண்டும். அடுத்த படத்துக்கான கதை, இயக்குநர், தயாரிப்பாளர் எல்லாமும் முடிவு செய்துவிட்டோம், படத்தின் அறிவிப்பு வெகு விரைவில் வரும்." என்றார்.
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் ரஜினிகாந்த் நடிக்கும் `தலைவர் 173' படத்தை இயக்க ஒப்பந்தமாகிவிட்டார். எனவே, வெங்கட்பிரபு இயக்கத்தில் தான் அடுத்து நடிக்க உள்ளார் சிவா என சொல்லப்பட்டது. ஆனால், அந்தப் படமும் இன்னும் துவங்கவில்லை. இப்போது சிவாவின் 26வது படத்தை சிவக்குமார் முருகேசன் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள `தாய் கிழவி' படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் பிப்ரவரி 30ம் தேதி வெளியாகவுள்ளது. சிவா - சிவக்குமார் பட அறிவிப்பு, வீடியோ ப்ரோமோ உடன் சிவகார்த்திகேயன் பிறந்தநாளான பிப்ரவரி 17ம் தேதி வரும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
