காலா-மாமன்னன்
காலா-மாமன்னன்ட்விட்டர்

‘என்னப்பா அந்த சீன் இப்படி முடிஞ்சுபோச்சு...’ ஹைப் கொடுத்து ரசிகர்களை ஏமாற்றிய மாரி செல்வராஜ்?

மாமன்னன் படம் வெளியாவதற்கு முன்பு படத்திற்கு மிகப்பெரிய அளவிற்கு ஹைப் கொடுத்தது வடிவேலு கையில் துப்பாக்கி உடனும், உதயநிதி கையில் அரிவாளுடனும் இருக்கும் போஸ்டர்தான்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் ஜூன் 29 ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. திரைக்கதை ரீதியாக சில விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வந்தாலும், வடிவேலு, ஃபஹத் பாசில், உதயநிதி ஆகியோரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. அசுரத்தனமான நடிப்பால் வடிவேலுவும், ஃபஹத்தும் ரசிகர்களை கட்டிப்போட்ட நிலையில், முந்தைய படங்களைப் போல் சொதப்பாமல் உதயநிதி ஸ்டாலினும் ஈடு கொடுத்து அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இண்டர்வெல் சண்டைக்காட்சிகள் மிகவும் அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளது.

மாமன்னன் போஸ்டர்
மாமன்னன் போஸ்டர்

மாமன்னன் படம் வெளியாவதற்கு முன்பு படத்திற்கு மிகப்பெரிய அளவிற்கு ஹைப் கொடுத்தது வடிவேலு கையில் துப்பாக்கி உடனும், உதயநிதி கையில் அரிவாளுடனும் இருக்கும் போஸ்டர்தான். அந்த போஸ்டர் மிகவும் இண்டென்சிவ் ஆக இருந்தது. குறிப்பாக வடிவேலுவின் முகம் ஆக்ரோஷத்தின், கோபத்தின் உச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்தியது. “நிச்சயம் இந்த காட்சி படத்தில் திருப்புமுனை ஏற்படுத்தும் வகையில் இருக்கும்... மிகப்பெரிய சண்டைக்காட்சி இந்த காட்சிக்கு பின் இருக்கும்” என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவியது. இண்டெர்வெல் காட்சி முடிந்த பிறகு வரும் இந்த காட்சி அற்புதமாக காட்சிப் படுத்தப்பட்டிருக்கும். உதயநிதியை உட்கார வைத்து விட்டு வடிவேலு துப்பாக்கியையும், அரிவாளையும் எடுத்து வரும் போது தியேட்டரில் உள்ள அத்துனை பேரும் இருக்கையின் நுனிக்கே வந்து கைதட்டினார்கள். அப்படி ஒரு புல்லரிப்பாக இந்த காட்சி இருந்தது. ஆனால், எதிர்பார்ப்பின் உச்சத்திற்கே அழைத்துச் சென்று சட்டென்று இந்த காட்சி முடிந்து விடும். காட்சி வேறு தன்மைக்கு மாறிவிடும். அதனால், ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது. உண்மையிலே அந்த காட்சியை வேறுவிதத்தில் முடித்து இருக்கலாம்.

க்ளைமேக்ஸ் காட்சியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கும் அந்த நேரத்தில் தேவையேயில்லாமல் சண்டைக்காட்சிகள் வைத்திருப்பார்கள். ஆனால், சண்டைக்காட்சிக்கான அத்தனை சூழலும் உருவாக்கப்பட்ட இந்தக் காட்சி, முற்றிலும் வேறுமாதிரி முடிக்கப்பட்டிருக்கும். இந்த காட்சியை காலாவில் ஒரு காட்சியுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் பேசி வாருகிறார்கள்.

காலா திரைப்படம்
காலா திரைப்படம்

காலா படம் என்றாலே ரசிகர்களுக்கு வரும் வசனம் ‘கியாரே செட்டிங்கா.. வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன் தில் இருந்தா மொத்தமா வாங்கலே’ என்பதுதான். பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா படத்தில் அந்த காட்சிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. படத்தில் முக்கியமான ஒரு இடத்தில் ரஜினிக்கு ஒரு மாஸ் சீன் வரும், ஒரு மாஸான சண்டைக்காட்சி வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில்தான் இந்த காட்சி வரும்.

ரஜினியை வில்லன்கள் சுத்துப்போட்டது போல் இருக்கும் அந்தக்காட்சி, கொஞ்சம் கொஞ்சமாக ஹைப் ஏற்றிக்கொண்டே செல்லும். ரஜினிக்கு மிகப்பெரிய ஸ்டண்ட் சீன் அந்த நேரத்தில் வரும் என்று எதிர்பார்த்தால் அவரது மகன் கதாபாத்திரம் வந்து சண்டையிடுவார். இது மிகப்பெரிய ஏமாற்றமாக ரசிகர்களுக்கு அமைந்தது. அதன் பிறகு மழையில் பாலத்தின் மேல் சண்டை காட்சி அமைக்கப்பட்டிருந்தாலும். ஆனால் உண்மையில் சண்டைக்காட்சிக்கான சரியான தருணம் முன்பு குறிப்பிடப்பட்ட அந்த சீன் தான்.

இப்படியாக இரண்டு சீன்களும் ஹைப் கொடுத்துவிட்டு பின் ஏமாற்றமளிக்கும் வகையில் உள்ளதென ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com