விஜய் சாரோட மெமரி, சூர்யா சாரோட காஃபி, தனுஷ் சார் நடிப்பு! - மமிதா பைஜூ | Mamitha Baiju | Vijay
மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி தமிழ் சினிமாவிலும் கலக்கிக் கொண்டிருப்பவர் மமிதா பைஜூ. `ட்யூட்' படம் மூலம் பெரிய வரவேற்பைப் பெற்றவர், விஜயுடன் `ஜனநாயகன்' படத்திலும், சூர்யாவுடன் `கருப்பு', தனுஷுடன் `கர' படத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் விஜய், சூர்யா, தனுஷ் ஆகியோருடன் நடித்தது பற்றி கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், "இது எல்லாம் உடனே உடனே நடப்பது, சில சமயம் surreal ஆக இருக்கிறது. கடவுள் இதை எல்லாம் எனக்கு கொடுப்பதற்கு நன்றி. விஜய் சார் நேரம் தவறாமல் வருபவர்; பேச கொஞ்சம் தயங்குபவர். ஆனால் பழக மிகவும் இனிமையானவர். நாம் சொல்லும் சின்ன விஷயத்தைக்கூட நினைவுவைத்து சில மாதம் கழித்து சந்திக்கும்போது, அதைப் பற்றி மீண்டும் கேட்பார். எனக்கெல்லாம் 2 நாட்கள் முன்னாள் நடந்ததுகூட நினைவில் இருக்காது. மதிய உணவுக்கு என்றாலே Salmon (மீன் வகை) சாப்பிடுவார். நான் அவரிடம் `என்ன சார் சாலமன் சாப்பிட்டீர்களா?' எனக் கேட்பேன், அவரும் `அம்மா மா' என்பார்.
சூர்யாவுடன் 46இல் நடித்தது செம ஜாலியாக இருந்தது. சூர்யா சாரிடம் எப்போதும் ஒரு ஸ்பெஷலான காபி இருக்கும். அது மிகவும் சிறப்பாக இருக்கும். சாரின் உதவியாளரிடம், ’அது என்ன காபி’ எனக் கேட்டேன். அதைப் பார்த்த சூர்யா சார், அன்றிலிருந்து ஷூட் முடியும்வரை அந்த காபியை எனக்கும் கொடுக்கச் சொல்லிவிட்டார், தினமும் எனக்கு கிடைத்தது.
தனுஷ் சாருடன் நடிப்பது சவாலானது. வழக்கமாக என்னுடைய காட்சி எடுக்கும்போது என் வசனங்களை நான் சரியாக பேசிவிடுவேன். ஆனால் ஒரு காட்சியில் அவருடன் நடித்தபோது என்னுடைய வசனங்களை எல்லாம் மறந்துவிட்டேன். நடிப்பு பற்றி அவரிடம் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன்" என்றார்.

