விஷாலுக்கு முதல் படமே வெற்றியாக அமைய வேண்டும்! - அஞ்சலி | Vishal | Anjali | Magudam
விஷால் இயக்கி நடித்த ‘மகுடம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டில் பேசிய அஞ்சலி, இது அவரின் முதல் இயக்குநர் முயற்சி என்பதால் குழுவுக்கு மிக நெருக்கமான படம் என கூறுகிறார். அன்னபூரணி கதாபாத்திரம் தன்னிடம் இருந்து அதிக ஆற்றலை எடுத்ததாகவும், டப்பிங் முடிந்த பின் ஒருவாரம் அந்த பாத்திரத்திலிருந்து வெளியே வர முடியவில்லை என்றும் தெரிவித்தார். ஆகஸ்ட் 14 வெளியீடும், விஷாலின் முதல் பட வெற்றியும் தன் ஆசை என கூறினார்.
விஷால் இயக்கி நடித்துள்ள `மகுடம்' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அஞ்சலி "மகுடம் பல காரணங்களுக்காக எங்கள் குழுவுக்கு மிகவும் நெருக்கமான ஒரு படம். அதில் முக்கியமான காரணம், விஷால் முதல் முறை இயக்குகிறார் என்பது. அதிலிருந்து ஒரு ஸ்பெஷல் கவனம் இருக்கும். முதல் குழந்தை போல தான் முதலில் நடிப்பது, தயாரிப்பது, இயக்குவது. அவரின் கடின உழைப்பை நேரில் பார்த்திருக்கிறேன். அதற்கான பாராட்டுகளுக்கு அவர் நிச்சயம் தகுதியானவர். நான் இந்தப் பத்தாஹ்த்துக்கு டப்பிங் செய்து முடித்த பின் ஒருவாரம் அதிலிருந்து வெளியே வர முடியவில்லை.
சில பாத்திரங்கள் மட்டும் நம்மிடம் இருந்து நிறைய ஆற்றலை எடுக்கும். இந்தப் படத்தில் நான் நடித்துள்ள அன்னபூரணி பாத்திரம் அப்படியானது தான். இயக்குநர் என்னுடைய பாத்திரத்தை சிறப்பாக எழுதி இருக்கிறார். எனக்கு மிகவும் பிடித்த பாத்திரங்களில் ஒன்றாக அன்னபூரணியையும் சேர்த்துக் கொள்வேன். தமிழ் சினிமாவில் முதல் முறையாக இந்தப் படத்தில் தான் ஸ்டண்ட் காட்சிகளில் நடித்திருக்கிறேன். நானும் விஷாலும் ஆடிய நச்சிந்தி மச்சானே பெரிய ஹிட் ஆகி இருக்கிறது.
இந்தப் படத்தில் நேர்மறையான பல விஷயங்கள் இருக்கிறது. அதே போல படமும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகி எல்லோருக்கும் பிடித்து, விஷாலுக்கு முதல் படமே வெற்றியாக அமைய வேண்டும் என நான் விரும்புகிறேன். மொத்த படக்குழுவுக்கும் இந்த மகுடம் நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என நம்புகிறேன். ஆர் பி சௌத்ரி சார் நம்மிடையே இல்லை என்றாலும், அவரின் ஆசிர்வாதம் இந்தப் படத்துக்கு இருக்கும்." என்றார்.

