தமிழ் சினிமாவில் தனது வரிகளால் ஆனந்த யாழை மீட்டிய தனித்துவ கலைஞன் - #HBDNaMuthukumar

ராஜாவின் இசைக்கும் தனது பாடல் வரிகளால் வார்த்தைகளை மிதக்க விட்டிருப்பார் நா.முத்துக்குமார்
நா.முத்துக்குமார்
நா.முத்துக்குமார்File image

சொந்த ஊரான காஞ்சிபுரத்தில் இயற்பியல் துறையில் இளங்கலை பட்டம் முடித்த கையோடு சென்னையை நோக்கி கவிதை கனவுகளோடு வந்த நா.முத்துக்குமார், பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் முதுகலை பட்டம் முடித்து, பின்பு தமிழ் சினிமாவில் சரித்திரம் படைத்த கதையே மிகவும் சுவாரஸ்யமானது. இயல்பாகவே சினிமா ஆசை தொற்றிக்கொண்ட கலைஞனை வாரி அணைத்து அங்கீகரித்து கொண்டவர் அதிசய கலைஞன் பாலு மகேந்திரா ஆவார்.

நா.முத்துக்குமார்-பாலுமகேந்திரா
நா.முத்துக்குமார்-பாலுமகேந்திரா

தமிழ் திரைப்படங்களில் ஒரு திரைப்படம் பார்த்துவிட்ட பிறகு அப்படத்தை இயக்கிய இயக்குநர், நடித்த நடிகர்கள் மற்றும் இசையமைப்பாளர் மட்டுமே மக்களுக்கு நினைவிற்கு வருவார்கள். ஆனால் பாடலாசிரியர்களும் மக்கள் நினைவில் வைத்துக்கொள்ள நா.முத்துக்குமாரின் வரிகள் தான் காரணமாக இருக்கின்றன என்று சொன்னால் மிகையாகாது. காதுகளின் அருகே அசைப்போட்ட அவரின் வரிகள் இதயங்களில் உரையாடிக் கொண்டிருக்கின்றன என்றால் அதுதான் நா.முத்துக்குமாரின் சிறப்பு. அவரின் வரிகளால் வெளிவந்த பாடல்கள் காதல் நிகழ்ந்த காலத்திற்கே கொண்டு சேர்க்கும் வல்லமை பெற்று இருக்கின்றன. “செவி வழியே உணர்வுகளை தூண்டி உயிரை தொடும்” வரிகளை அள்ளி அள்ளிக் கொடுத்திருப்பார்.

இத்தகைய பெரும் ஆற்றல் நிறைந்த கலைஞனான நா.முத்துக்குமார் சிறந்த பாடலாசியருக்கான தேசிய விருதை “தங்க மீன்கள்” மற்றும் “சைவம்” படங்களுக்காக பெற்றார். “தேவதையை கண்டேன்” பாடலில் காதலின் வலியை வரிகளில் நமக்குள் கடத்திருப்பார். “வெயிலோடு விளையாடி” என்ற பாடலின் மூலம் நம்மை மழலை பருவத்திற்கே போக வேண்டும் என்ற ஆசையை தூண்டும் வகையில் வரிகளை எழுதியிருப்பார். கற்றது தமிழ் திரைப்படத்தில் “உனக்காகத் தானே என் உயிர் உள்ளது” பாடலில் கதாநாயகிக்கு தனது காதலின் பரிவை கதாநாயகன் கடத்திருப்பார். அத்தகைய, பாடலை செவி வழியே கேட்டாலும் மனதால் உணரச்செய்தது நா.மு-வின் வரி வடிவமைப்பே காரணம்.

நா.முத்துக்குமார்-யுவன் சங்கர் ராஜா
நா.முத்துக்குமார்-யுவன் சங்கர் ராஜா

புதுப்பேட்டை படத்தில் வரும் “ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது” பாடல் இன்றுவரை இன்றைய இளைஞர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் பாடலாக உள்ளது. சத்தம் போடதே படத்தில் “பேசுகிறேன் பேசுகிறேன்” என்ற பாடல் மூலம் இதயத்தை நம்முடன் உரையாட வைத்திருப்பார். அதேப் படத்தில் மழலையை கொஞ்சும் கதாநாயகனுக்காக “அழகு குட்டிச் செல்லம்” என்கிற பாடலுக்கு தனது வரிகளால் மெருகூட்டியிருப்பார். மேலும், யாரடி மோகினி படத்தில் “எங்கேயோ பார்த்த மயக்கம்” பாடல், “வெண்மேகம் பெண்ணாக உருவானதோ” உள்ளிட்ட அனைத்துப் பாடலையும் வார்த்தைகளால் செதுக்கியிருப்பார்.

இத்துடன், ராஜாவின் இசைக்கும் தனது பாடல் வரிகளால் வார்த்தைகளை மிதக்க விட்டிருப்பார். ஜூலி கணபதி படத்தில் “எனக்கு பிடித்த பாடல் அது உனக்கு பிடிக்குமே” என்ற பாடல், நீதானே என் பொன் வசந்தம் படத்தில் உள்ள அனைத்து பாடலையும் அவ்வளவு அழகாய் எழுதியிருப்பார்.

பாலா-இளையராஜா-நா.மு.
பாலா-இளையராஜா-நா.மு.

பல்வேறு இசையமைப்பாளர்கள் உடன் பயணித்திருந்தாலும் யுவனின் இசையும், நாமு.வின் வரிகளும் இன்றைய இளைஞர்களின் playlist-ஆகவே இருக்கின்றன. யுவனின் இசையில் வெளிவந்த தீபாவளி படத்தில் “போகாதே போகாதே” பாடல், “காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்” உள்ளிட்ட அனைத்து பாடல்களையும் தனது வரிகளால் வியக்க வைத்திருப்பார்.

நா.முத்துக்குமார்
நா.முத்துக்குமார்எம்.கே.அரவிந்த்

மேலும், தமிழ் சினிமாவில் அம்மா செண்ட்டிமெண்ட்க்கு ஏராளமான பாடல்கள் இருக்க, ஆனால், எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் தியாக தலைவர்களாக இருக்கும் தந்தைகளுக்காகவே “தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே” என்ற பாடலின் மூலம் மகனுக்கும் தந்தைக்குமான உறவை தனது வரிகளால் விவரித்திருப்பார் நா.மு.

வாழ்வில் மனிதன் சந்திக்கும் அனைத்து தருணங்களுக்கும் இவரிடம் வரிகள் உண்டு. வலிகள் நிறைந்த வாழ்க்கைப் பயணத்தை இலகுவாக்கிக்கொண்டே இருக்கின்றன. இந்த காலமாற்றங்களில் கரைந்து போகாத கலைஞனுக்கு பேரன்பின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

- எம்.கே.அரவிந்த்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com