‘கைதி 2’ எப்போது? அஜித்துடன் இணைவீர்களா? அப்போ ரஜினி படம்?.. அசராமல் லோகேஷ் கனகராஜ் கொடுத்த பதில்கள்

‘கைதி 2’ படத்திற்கு முன்பாக ஒரு படத்தை இயக்கவுள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ள நிலையில், அப்படம் நடிகர் ரஜினிகாந்தின் 171 ஆவது படமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ்PT Desk

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், காயத்ரி, சூர்யா (சிறப்புத் தோற்றம்) ஆகியோரின் நடிப்பில் உருவான திரைப்படம் ‘விக்ரம்’. கடந்த ஆண்டு வெளியான இப்படம் பாக்ஸ் ஆபீஸில் 400 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தை அடுத்து இரண்டாவது முறையாக விஜய்யுடன் கூட்டணி அமைத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். விஜய்யின் 67 ஆவது படமாக தயாராகி வரும் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு, கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று சமீபத்தில் தான் நிறைவடைந்தது.

Follow your heart

இதனைத் தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற உள்ளன. வரும் அக்டோபர் 19 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார். சிறப்புரை வழங்கிய அவர் மாணவர்களுடனும் கலந்துரையாடினார். பின்னர் மேடையில் பேசிய அவர், “சரவணம்பட்டியில் தான் முதல் முதலாக வேலை செய்தேன். எனக்கு இந்த பகுதி மிகவும் ஸ்பெஷல். Follow your heart என்பதை பின்பற்றுங்கள். நான் படிக்கும் போது இருந்த கோவை பெரிதும் மாறி விட்டது. எங்கு படித்தாலும் சினிமா கற்றுக்கொள்ள சென்னை தான் சென்று ஆக வேண்டும் என்ற சூழல் உள்ளது. கோவையிலும் திரைத்துறை சார்ந்து ஸ்டூடியோ அமைந்தால் மகிழ்ச்சி. எனது 6 ஆவது படம் குறித்து விரைவில் கூறுகிறேன்” என்று தெரிவித்தார்.

விஜய்யுடன் 3-வது முறை கூட்டணி?

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தபோது அவரிடம் பல்வேறு கேள்விகளை நிருபர்கள் எழுப்பினர். அப்போது, மீண்டும் மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணைவீர்களா என்று எழுப்பப்பட் கேள்விக்கு, அவருடன் எத்தனை முறை வேண்டுமானாலும் சேர்ந்து படம் பண்ணலாம் என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார். பின்னர், ‘லியோ’ படம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், படப்பிடிப்பு முடிந்துள்ளது என்றும், பேட்ச் ஒர்க் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் ஆரம்பிக்க உள்ளன என்றும் கூறினார்.

இரும்பு கை மாயாவி தான் ரஜினி படமா?

கமல்ஹாசனுக்கு அடுத்து, ரஜினியை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வருகிறதே என்று நிருபர் ஒருவர் கேட்டதற்கு, அந்த அப்டேட் குறித்து படக்குழுவினரிடமிருந்து வரும் என நினைக்கிறேன் எனவும், தான் எதுவும் தற்போது சொல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்தார். ‘இரும்பு கை மாயாவி’ புராஜெக்ட் தான் ரஜினியின் படமாக இருக்குமா என்று கேள்விக்கு, தற்போது அப்படத்தை எடுக்கமுடியாது; எனது கனவுப்படம் அது; அப்படம் எடுக்க நீண்ட நாட்களாகும் என்று கூறினார்.

அஜித்துடன் இணைவீர்களா?

மேலும் அவர் பேசுகையில், “அஜித்தை வைத்து வாய்ப்பு அமைந்தால் செய்யலாம். ‘லியோ’ LCU-ல் இருக்கிறதா என்று சொல்லி விட்டால் பின்பு சொல்வதற்கு ஒன்றும் இல்லாமல் போய்விடும். அனைவரை வைத்தும் படம் செய்ய ஆசை தான் (சிவகார்த்திகேயன் வைத்து படம் எடுப்பீர்களா என்ற கேள்விக்கு). அடுத்து ஒரு படம் முடித்தப்பின் ‘கைதி 2’ எடுக்கப்படும். தொழில் மீது இருக்கும் பயம் தான் நம்மை பெரிய இடத்திற்கு கொண்டு செல்லும். கமல் உடன் படம் எடுப்பேன் என நினைத்தது கூட இல்லை. நான் வசித்த தெருவில் நான் மட்டுமே கமல் ரசிகராக இருந்தேன். ரஜினி ரசிகர்களே அதிகளவில் இருந்தனர்.

செப்டம்பரில் ‘லியோ’ இசை வெளியீட்டு விழா

எந்த ஒரு இடத்திற்குள் செல்லும் போதும் கஷ்டங்கள் இருக்கும். அதை அவமானமாக பார்க்காமல் படிப்பினையாக எடுத்துக் கொள்ள வேண்டும். பொதுவாக அனைவரையும் சார் என்று தான் கூப்பிடுவேன். விஜய்யை மட்டும் தான் அண்ணன் என கூப்பிட தோன்றியது. பெயருக்கு மட்டும் அல்ல உண்மையிலேயே அவர் அண்ணன் தான். யாருக்கும் தெரியாமல் பல உதவிகளை அவர் செய்து வருகிறார். ‘லியோ’ இரண்டாவது பாடல் கொஞ்சம் தாமதம் ஆகும். செப்டம்பர் மாதம் ‘லியோ’ இசை வெளியீட்டு விழா நடக்க உள்ளது.” என்று குறிப்பிட்டார்.

லியோ படத்தில் அரசியல்?

சமூக நீதி சார்ந்த படங்கள் எடுக்காததற்கு காரணம் என்ன என கேட்டபோது, அதற்கான போதிய அறிவு இல்லை என லோகேஷ் பதிலளித்துள்ளார். ‘லியோ’ திரைப்படத்தில் அரசியல் இருக்காது என்று தெரிவித்த அவர், தனக்கு ஆயிரம் கோடி முக்கியம் அல்ல என்றும் (லியோ படம் ஆயிரம் கோடி வசூலிக்குமா என்ற கேள்விக்கு), தனிப்பட்ட நபர் கொடுக்கும் 150 ரூபாய் தான் முக்கியம் என்றும் தெரிவித்தார்.

‘ரஜினி 171’ பிப்ரவரியில் படப்பிடிப்பு?

இதற்கிடையில், ரஜினிகாந்தின் 171 ஆவது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும், அதனை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதுடன், படப்பிடிப்பு அடுத்த வருடம் பிப்ரபரி அல்லது மார்ச் மாதத்தில் ஆரம்பிக்கும் என்றும் தகவல் பரவி வருகிறது. ரஜினிகாந்த் தனது 169 ஆவது படமான ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், தனது மூத்த மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் ‘லால் சலாம்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பையும் முடித்துள்ள ரஜினிகாந்த், அடுத்து ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள படத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com