Jailer-Leo-Maaveeran
Jailer-Leo-MaaveeranTwitter

‘ஜெயிலர்’ ரன்னிங் டைம் எவ்வளவு? - 11 நாட்களில் கோடிகளை அள்ளிய ‘மாவீரன்’ #Top10Cinemanews

தமிழ்நாட்டில் மட்டும் 44 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை மாவீரன் ஈட்டியுள்ளது.

1. ‘ஜெயிலர்’ ரன்னிங் டைம்

Jailer
JailerTwitter

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஜாக்கி ஷெராஃப், மோகன்லால், ஷிவ் ராஜ்குமார், சுனில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி, வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முதல் பாதி ஒரு மணி நேரம் 19 நிமிடங்கள் என்றும், இடைவேளைக்குப் பிறகு இரண்டாம் பாதி ஒரு மணி நேரம் 30 நிமிடங்கள் என்றும் மொத்தமாக 2 மணி நேரம் 49 நிமிடங்கள் காட்சிப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், யு/ஏ தணிக்கை சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

2. ‘கேப்டன் மில்லர்’ டீசர் தேதி அறிவிப்பு

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், ஷிவ் ராஜ்குமார், பிரியங்கா அருள் மோகன், சந்தீப் கிஷன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு வருகிற ஜூலை 28 ஆம் தேதி இப்படத்தின் டீசர் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

3. ‘மாவீரன்’ ரூ. 75 கோடி வசூல்

சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில், மடோன் அஸ்வின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான திரைப்படம் ‘மாவீரன்’. இப்படம் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில், 11 நாட்களில் 75 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 44 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளது.

4. தெலுங்கில் காவாலா பாடலை வெளியிடும் தமன்னா

ரஜினிகாந்த்தின் 169 ஆவது படமான ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘காவாலா’ பாடல் தமிழில் வெளியாகி வைரல் ஆனது. இப்பாடலுக்கு இந்தியாவைத் தாண்டியும் பலர் ரீல்ஸ் செய்து வருகின்றனர். இந்நிலையில், இப்பாடலின் தெலுங்குப் பதிப்பு தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் நாளை பிற்பகல் 3 மணியளவில் வெளியிடப்படவுள்ளது. நடிகை தமன்னா இந்தப் பாடலை வெளியிடவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

5. சுவிட்சர்லாந்தில் அஜித்

மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடிக்கவுள்ளார் நடிகர் அஜித். அதற்கான ப்ரீ புரொடக்ஷன்ஸ் பணிகள் சென்றுக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது சுவிட்சர்லாந்தில் நடிகர் அஜித் ஓய்வு எடுத்து வருகிறார். அங்கு ரசிகர்களுடன் சேர்ந்து அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

6. ஓய்வுக்காக வெளிநாடு சென்ற விஜய்

நடிகர் அஜித் போன்று நடிகர் விஜய்யும், ஓய்வுக்காக வெளிநாடு சென்றுள்ளார். அவர் எங்கே சென்றுள்ளார் என்பது தெரியாத நிலையில், வெளிநாடு செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தபோது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. ‘லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது. மேலும், அரசியலிலும் விஜய் கவனம் செலுத்தி வரும் நிலையில், அவர் சென்னை திரும்பி வந்தவுடன் தனது அடுத்தப்படமான வெங்கட் பிரபு இயக்கவுள்ள படத்தில் இணைகிறாரா அல்லது அரசியல் குறித்த அறிவிப்பு எதும் வெளிவருமா என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

7. கம்பேக் கொடுக்கும் கவுண்டமணி

நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கவுள்ள முழுநீள நகைச்சுவைப் படத்திற்கு ‘ஒத்த ஓட்டு முத்தையா’ என பெயரிடப்பட்டுள்ளது. சாய் ராஜ்கோபால் இயக்கும் இப்படத்தில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, மாரிமுத்து, சிங்கம் புலி, ரவி மரியா, வையாபுரி உள்ளிட்ட பலர் இணைந்து நடிக்கவுள்ளனர்.

8. ‘லியோ’ வில் இணைந்த கோரிப்பாளையம் ஹீரோ

Ramakrishnan
RamakrishnanTwitter

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் ‘லியோ’ படத்தில், நடிகர் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இந்நிலையில், ‘கோரிப்பாளையம்’ படத்தின் கதாநாயகனாக நடித்த ராமகிருஷ்ணன், ‘லியோ’ படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவர், மாரிசெல்வராஜின் ‘மாமன்னன்’ படத்தில் உதயநிதியின் நண்பனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

9. இந்தியன்-2 டிஜிட்டல் உரிமை இவ்வளவா?

இந்தியன் 2
இந்தியன் 2

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி வருகிறது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம். இப்படத்தின் டிஜிட்டல் உரிமை மட்டுமே ரூ. 200 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச ஓடிடி முன்னணி நிறுவனம் ஒன்று மிகப்பெரிய விலையை கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

10. போர்ச்சுக்கல் பறந்த அதிதி ஷங்கர்

அதிதி ஷங்கர்
அதிதி ஷங்கர்

‘விருமன்’ படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக அறிமுகமான ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், அடுத்ததாக சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தில் நடித்தார். இந்த இரு படங்களும் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் அதிதி ஷங்கர். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற நிலையில், போர்ச்சுக்கல் நாட்டிலுள்ள லிஸ்பன் நகரில் நடக்கும் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக அதிதி ஷங்கர் படக்குழுவினருடன் அந்நாட்டுக்கு சென்றுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com