”ப்ரியா பவானி சங்கர் அப்போவே சொன்னாங்க; நான் கேட்கல!” - கரு.பழனியப்பன் சொன்ன சம்பவம்!
கவிஞர் மனுஷ்யப்புத்ரனின், `ஒரு நாள் வசந்தம்' நாவல் மற்றும் `யமுனா வாழ்ந்த வீடு', `இந்தக் கோடை நம்மைப் பிரித்துவிடும்', `நீ என் வாழ்வில் இருந்தாயா?', `கண்ணீரின்றிப் போய் வாருங்கள்', `ஹாலோவீன் தினத்தில்' ஆகிய 5 கவிதை தொகுப்புகள் வெளியீட்டுவிழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட கரு. பழனியப்பன் மற்றும் ப்ரியா பவானி சங்கர் சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்றை பகிர்ந்துகொண்டனர்.
கரு. பழனியப்பன் பேசியபோது, "7 - 8 வருடங்களுக்கு முன்பு ப்ரியா அவர்கள் தன்னுடைய திரை வாழ்வை தொடங்கி இருந்த காலம். அப்போது நான் ஒரு படம் இயக்க திட்டமிட்டிருந்தேன். அதில் நடிப்பதற்காக அவரை அழைத்திருந்தேன். என்னுடைய அலுவலகத்துக்கு வந்து பேசினார். கடைசியாக உரையாடலின் முடிவில், ’யார் தயாரிப்பாளர்’ எனக் கேட்டார். நான் அவரின் பெயரைச் சொன்னேன். அதைக் கேட்டுவிட்டு அவர் கிளம்பிச் செல்லும் முன், என் மனது கோணாதபடி, ’சார் அவரிடம் பணம் இல்லை, அவர் தயாரிக்க மாட்டார், என் நேரத்தையும், உங்கள் நேரத்தையும் இதில் வீணாக்காதீர்கள்’ என்பதை புரியவைத்தார்.
’உங்க படத்தில் கண்டிப்பாக நடிக்கிறேன், இந்த கதை ஓகே. ஆனால் இந்த தயாரிப்பாளர் வேண்டாம்’ என்றார். உடனே எனக்கு, ப்ரியா நேற்று வந்தவர். அவருக்கு தெரியுமா? எனக்கு தெரியுமா? என்ற எண்ணம் எழுந்தது. எனவே நான் கதாநாயகியை மாற்றலாம் என முடிவுக்கு வந்துவிட்டேன். ஆனால் 5 வருடம் கழித்துதான் எனக்கு தெரிந்தது அந்த தயாரிப்பாளரிடம் பணம் இல்லை என" என்றார்.
பின்னர் பேசிய ப்ரியா பவானி சங்கர், "கரு. பழனியப்பன் சார் பேச ஆரம்பிக்கும்போது அய்யய்யோ அன்னைக்கு நாம் என்னவெல்லாம் சொன்னோம், என்ன வார்த்தை சொன்னோம், அதை இவர் எப்படிச் சொல்லப்போகிறார் என்று பயம் வந்தது. ஆனால், அதை மிகக் கண்ணியமாக பகிர்ந்தமைக்கு நன்றி. அதை தெரிந்துகொள்ள ஐந்து வருடம் எடுத்துக் கொண்டதல்லவா, நான் விரைவாக கண்டுபிடித்துவிட்டேன்" என்றார்.

