நித்யா மேனன் | ரவி மோகன் | காதலிக்க நேரமில்லை
நித்யா மேனன் | ரவி மோகன் | காதலிக்க நேரமில்லைKadhalikka Neramillai

Kadhalikka Neramillai | நித்யா மேனன், ரவி மோகன் நடிப்பில் காதலின் புதிய கதை..!

திருமணம் தேவையா? குழந்தை அவசியமா? - காதலின் புதிய பரிமாணத்தை விவாதப் பொருளாக்குகிறது இந்த காதலிக்க நேரமில்லை
Published on
Kadhalikka Neramillai (3 / 5)

ரிலேஷன்ஷிப், குழந்தை, திருமணம் என எல்லாவற்றிலும் மாற்று சிந்தனை கொண்ட இருவருக்குள் ஈர்ப்பு வந்தால் என்ன நடக்கும் என்பதே காதலிக்க நேரமில்லை படத்தின் ஒன்லைன்

ஸ்ரேயா (நித்யா மேனன்) சென்னையை சேர்ந்த ஆர்க்கிடெக்ட். தனது காதலரை விரைவில் கரம்பிடிக்கும் வேளையில், அவருக்கும் தன் தோழிக்கும் தொடர்பு இருப்பதை தெரிந்து கொண்டு திருமணத்தை நிறுத்துகிறார் ஸ்ரேயா. ஆனால் தனக்கு குழந்தை வேண்டும் என்ற ஆசையை கைவிட மனமில்லாமல், செயற்கை கருத்தரிப்பு மூலம் கருவுருகிறார். இன்னொரு பக்கம் பெங்களூருரில் வசிக்கும் சித்தார்த் (ரவி மோகன்) குழந்தைகள் வேண்டாம் என்ற கண்டிஷனுடன், தன் கேர்ள் பிரெண்டுடன் நிச்சயதார்த்தத்திற்கு தயாராகிறார். ஆனால் அது நின்று போகிறது, தனது வேலையிலும் சில சிக்கல்களை சந்திக்கிறார். இந்த நிலையில் எதேர்ச்சையாக சந்திக்கிறார்கள் ஸ்ரேயா - சித்தார்த். அதன் பின் என்ன நடக்கிறது என்பதே கதை...

ஹீரோ காதலிக்கிறான், காதல் ஓக்கே ஆனதா? என்ற கதை காதலுக்கு பிரச்சனையாக குடும்பம், சாதி, மதம் எனப் பல்வேறு புறக்காரணிகளை விவாதித்த தமிழ் சினிமா, இப்போதுதான் அக காரணிகளைப் பற்றி பேச துவங்கியிருக்கிறது. சென்ற ஆண்டு வெளியான லவ்வர் அதற்கு சிறந்த உதாரணம். இப்போது வெளியாகியிருக்கும் கிருத்திகாவின் காதலிக்க நேரமில்லை படமும் அந்த உரையாடலை மென்மையாக, அழகாக நிகழ்த்தியிருக்கிறது. திருமணம் இல்லாமல் குழந்தை, திருமணத்துக்கு பிறகு குழந்தை எதற்கு, மனம் ஒத்த இருவர் இணைந்து வாழ திருமணம் தேவையா போன்ற களங்களை வைத்திருந்தாலும் எதையும் பிரசாரம் செய்யாமல், இதுதான் சரி, அது தவறு என எதையும் திணிக்காமல், ஒரு கேள்வியாக மட்டும் முன் வைப்பதும், அதை அடுத்த கட்ட உரையாடலுக்கு நகர்த்திய விதமும் கவனிக்க வேண்டியது. அந்த வகையில் கிருத்திகா மிக முதிர்ச்சியுடன் கையாண்டதற்கு பாராட்டுகள். திருமணமே ஆனாலும் குழந்தை வேண்டாம் என்ற முடிவில் இருந்து சித்தார்த் மாறுவதும், ஆண்கள் மீது நம்பிக்கை இழந்த ஸ்ரேயா மனம் மாறுவதுமான அந்த தருணங்கள் மிக இயல்பாக இருப்பதும், சில காமெடிகளும் படத்தை இதமானதாக மாற்றுகிறது.

நடிப்பு பொறுத்தவரை நித்யா மேனன், ரவி மோகன் இருவரும் மிக சிறப்பு. ஓவராக அலட்டிக் கொள்ளாமல், இயல்பாக ஒவ்வொரு காட்சியையும் கையாண்டிருப்பது அழகு. முதல்முறையாக ரவி, நித்யாவிடம் தன்னை அறிமுகப்படுத்துவதில் துவங்கி, லேப்டாப் பார்த்தது பற்றி தன்னை விளக்க முயல்வது வரை பல காட்சிகளில் நடிப்பு சிறப்பு. வெறுமனே தேங்க்ஸ் சாரி சொல்லும் காட்சியில் தன் உணர்வுகளை வெளிப்படுத்துவது உட்பட பல இடங்களில் அட்டகாசம் செய்திருக்கிறார் நித்யா மேனன். இந்தக் கதைக்குள் இவர்கள் இருவரின் அழகே, காதலை சொல்லிக் கொள்ளாமலே ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும் ஈர்ப்பை உணர்வுகளாலும், செயல்களாலும் வெளிப்படுத்துவதே. டி ஜே பானு சில காட்சிகளே வந்தாலும், அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். இவர்கள் தவிர யோகி பாபு, வினய், லால், மனோ, லட்சுமி ராமகிருஷ்ணன், மனோ, வினோதினி எனப் பலரும் மிக சிறப்பு.

படத்தின் பெரும் பலம் ஏ ஆர் ரஹ்மானின் பின்னணி இசை மற்றும் பாடல்கள்.காதலை வேறு ஒரு கோணத்தில் காட்டும் கதைக்கு பொருத்தமாக ஃப்ரெஷ்ஷான பின்னணி இசையை கொடுத்திருக்கிறார். மேலும் என்னை இழுக்குதடி, லாவண்டர் நேரமே பாடல்கள் காதில் ரீங்காரம் இடுகிறது. குறிப்பாக லாவண்டர் நேரமே பாடலின் வரிகள் மிக அழகு. வாழ்த்துகள் மஷூக் ரஹ்மான். படத்தின் இயல்பான நகர்வுக்கு தகுந்த வண்ணத்தை சேர்த்திருக்கிறது கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவு.

படத்தின் குறைகள் எனப் பார்த்தால், இன்னும் கொஞ்சம் எமோஷனலாக நம்மை படம் கனெக்ட் செய்திருக்க வேண்டும். கூடவே படத்தில் சொல்லும் விஷயங்களில் தெளிவு அதிகமாகவும், எளிதில் யூகிக்க கூடிய காட்சிகள் குறைவாகவும் இருந்திருக்க வேண்டும். பார்த்திவ் கதாப்பாத்திரம் தன்னுடைய தந்தை குறித்து கொள்ளும் கவலை, நமக்கு எந்த வித அழுத்தத்தையும் தரவில்லை. மேலும் சித்தார்த் எதற்காக குழந்தை வேண்டாம் என சொல்வதுற்கு காரணம் பூமி, மக்கள் தொகை என பேசுவது, ஒரு வாதத்திற்கு ஓகேயே தவிர, அதை ஒரு உணர்ச்சிகரமான முடிவாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. போலவே ஸ்ரேயாவுக்கு குழந்தை ஏன் அவசியம் என்பதும் அழுத்தமாக சொல்லப்படவில்லை. இவற்றில் எல்லாம் சற்று தெளிவு இருந்திருந்தால் எமோஷனலாக பார்வையாளர்களுக்கு கனெக்ட் இருந்திருக்கும். சைக்கோ கொலைகாரன் பற்றிய செய்தியைப் பார்த்து ஸ்ரேயா எடுக்கும் முடிவு, மீண்டும் சித்தார்த்தை சந்திக்க அவரின் எக்ஸ் கேர்ள் பிரண்ட் வருவது, பார்த்திவ் காணாமல் போவது எனப் பல விஷயங்கள் கதைக்கு கன்வீனியன்ட்டாக எழுதப்பட்டதாகவே தோன்றியது. அவற்றில் கொஞ்சம் இயல்புத்தன்மை இருந்திருக்கலாம்.

கிருத்திகா இயக்கிய பேப்பர் ராக்கெட் சீரிஸ் கூட ஒரு ஃபீல் குட் கதைதான், சில குறைகள் இருந்தாலும் வெகுவாக நம்மை கவரும். அதே போல இந்த காதலிக்க நேரமில்லை படத்திலும் சில குறைகள் இருந்தாலும், மொத்தத்தில் நம்மை அழகாக ஈர்க்கிறது. கண்டிப்பாக ஒரு இனிமையான அனுபவத்தை கொடுக்கும்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com