"காதல் கொண்டேன் 1 கோடியில் எடுத்த படம்!" - சோனியா அகர்வால் சொன்ன சுவாரஸ்யம் | Sonia Aggarwal | Will
சிவராமன் இயக்கத்தில் சோனியா அகர்வால், விக்ராந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் `வில்'. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இப்படத்தில் சோனியா அகர்வாலின் சகோதரர் சௌரப் அகர்வால் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட சோனியா அகர்வால் "இந்தப் படம் பற்றி மிக ஆர்வமாக இருக்கிறேன். ஏனென்றால் சகோதரர் (சௌரப் அகர்வால்) இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். அவரது முதல் படம் இது, உங்கள் ஆதரவை அவருக்கு அளியுங்கள். சிவராமன் சாருடன் எனக்கு இது இரண்டாவது படம். `தனிமை' படத்தில் இதற்கு முன் பணியாற்றினோம். அப்போதிருந்து அவர் நல்ல நண்பராகிவிட்டார். தினசரி வாழ்க்கையில் இருக்கும் விஷயங்களை சினிமாவாக மாற்றுவார். அதுவே அவரது சிறப்பு. `வில்' அப்படி ஒரு படம் தான். அவரே ஒரு வக்கீல் என்பதால், எனக்கு கோர்ட் பற்றியும், ஜட்ஜ் ரோலில் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியும் எனக்கு அவரே சொல்லித்தந்தார். விக்ராந்துடன் இணைந்து நடித்ததும் நல்ல அனுபவமாக இருந்தது.
இந்தப் படத்திற்கு உங்கள் ஆதரவை அளிக்க வேண்டும். நான் எப்போதும் பெரிய பட்ஜெட் படம், சின்ன பட்ஜெட் படம் என்ற பாகுபாட்டை பார்த்ததில்லை. ஏனென்றால் என்னுடைய அறிமுகப்படமான `காதல் கொண்டேன்' ஒரு கோடியில் எடுக்கப்பட்ட படம். அது மிகப்பெரிய ஹிட்டானது. பார்வையாளர்களுக்கு எது பிடிக்கும் என்பதோ, எது வரவேற்பை பெரும் என்பதோ நமக்கு எப்போதும் தெரியாது. எனவே தான் நான் இத்தகைய பாகுபாடுகள் பார்ப்பதில்லை." எனப் பேசினார்.