`தலைவர் தம்பி தலைமையில்' பட சர்ச்சை வசனம்.. ஓடிடி வெளியீட்டில் நீக்கம்! | Jiiva | TTT
நிதிஷ் சஹாதேவ் இயக்கத்தில் ஜீவா நடித்து பொங்கலுக்கு வெளியான படம், `தலைவர் தம்பி தலைமையில்'. இப்படம் திரையரங்குகளில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. வசூல் ரீதியிலும் லாபகரமான படமாக மாறியது இப்படம்.
திரையரங்கில் ஓடி பெரிய வெற்றியடைந்த இந்தப் படம், கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இப்படத்தின் டீசரில் "படிச்சு படிச்சு சொன்னேனேடா கண்டிஷன்ஸ ஃபாலோ பண்ணுங்க... கண்டிஷன்ஸ ஃபாலோ பண்ணுங்கனு" என்ற வசனம் இடம்பிடித்திருந்தது. கரூர் துயர சம்பவத்தின்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மருத்துவமனையில் கூறிய இந்த விஷயத்தை, பட டீசரில் நகைச்சுவையாக பயன்படுத்தி இருந்ததற்கு அப்போதே எதிர்ப்பு கிளம்பியது. மேலும் படம் திரையரங்கில் வெளியானபோது படத்தின் கடைசி வசனமாக இதே வசனம் இடம்பெற்று இருக்க, பெரிய அளவில் விமர்சனத்துக்கு ஆளானது.
இந்த எதிர்வினைகளை கருத்தில்கொண்டு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான, `தலைவர் தம்பி தலைமையில்' பட பதிப்பிலிருந்து அந்த வசனத்தை நீக்கியுள்ளது படக்குழு. தங்கள் மீது சொல்லப்பட்ட விமர்சனத்துக்கு பொறுப்பேற்று, அந்த வசனத்தை நீக்கியுள்ளது தற்போது பாராட்டுகளை பெற்று வருகிறது. மேலும் `தலைவர் தம்பி தலைமையில்' படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் உரிமையை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் பெற்றுள்ளார் எனவும் கூறப்படுகிறது.

