`சூர்யா 47' தமிழ்ப் படமா.. மலையாளப் படமா? - ஜித்து மாதவன் சொன்ன பதில் | Suriya 47
சூர்யா நடிப்பில் ஜித்து மாதவன் இயக்கிவரும் படம் `சூர்யா 47'. இப்படத்தில் நஸ்ரியா நசீம், நஸ்லன் ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடிக்க சுஷின் ஷ்யாம் இசையமைக்கிறார். இந்தப் படம் மூலம் பெரிய இடைவெளிக்குப் பின் சூர்யா மீண்டும் போலீஸ் பாத்திரத்தில் நடிக்கிறார். ஜித்து மாதவன் இதற்கு முன்பு `ரோமாஞ்சம்', `ஆவேஷம்' என மலையாளத்தில் இரு ஹிட் படங்களை கொடுத்தார். எனவே `சூர்யா 47' மலையாள படமா, தமிழ்ப் படமான என்ற சந்தேகம் இருந்து வந்தது.
இதனையடுத்து சமீபத்தில் கொச்சி ஏர்போர்ட்டில் ஜித்து மாதவனிடம், `ஆவேஷம் 2' பற்றி கேட்கப்பட, "இப்போதைக்கு அதற்கான பேச்சுவார்த்தைகள் துவங்கியுள்ளது" எனத் தெரிவித்தார். சமீபத்தில் பகத் பாசில் கலந்துகொண்ட நிகழ்வில் `ஆவேஷம் 2' பற்றி கேட்கப்பட, " ‘ஆவேஷம் 2’ எப்போது என எங்கு போனாலும் கேட்கிறார்கள், கண்டிப்பாக அந்தப் படம் உண்டு. 2027 அல்லது 2028இல் துவங்கிவிடுவோம்" என்றார். இதன்மூலம் ஆவேசம் 2 உருவாவது உறுதி.
மேலும் அவரிடம், `சூர்யா 47' பற்றி கேட்கப்பட, "`சூர்யா 47' படப்பிடிப்பு போய் கொண்டிருக்கிறது. அதுகுறித்த அப்டேட்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்” என்றார். மேலும், இது ஒரு தமிழ்ப் படம் என்பதையும் உறுதிபடுத்தி இருக்கிறார். சூர்யா நடிப்பில் `கருப்பு' படம் தேர்தலுக்குப் பிறகு வெளியாக உள்ளது. அதன் பிறகு ஜீத்து மாதவன் படம், வெங்கி அட்லூரி படம் என வரிசையாக சூர்யா படங்கள் வர இருக்கின்றன.

