
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் 400 கோடி ரூபாய்க்கு அதிகமான வசூலுடன் மாபெரும் வெற்றிபெற்றது. இதையடுத்து நடிகர் கமல்ஹாசன், விக்ரம்’ படம் வெற்றியடைந்ததை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜூக்கு ஆடம்பர காரும், சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச்சும் பரிசளித்தார்.
தற்போது ‘இந்தியன் 2’ படத்தில் நடிகர் கமல்ஹாசன் கவனம் செலுத்தி வருகிறார். இந்தப் படம் கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில், இயக்குநர் ஷங்கருக்கு, கமல்ஹாசன் வாட்ச் ஒன்றை பரிசளித்துள்ளார்.
இதுகுறித்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “‘இந்தியன் 2’ படத்தின் பிரதான காட்சிகளை இன்று பார்த்தேன். இயக்குநர் ஷங்கருக்கு என் உளமார்ந்த வாழ்த்துகள். இதுவே உங்கள் உச்சமாக இருக்கக் கூடாது என்பதும் என் அவா. காரணம், இதுதான் உங்கள் கலை வாழ்வின் மிக உயரமான நிலை. இதையே உச்சமாகக் கொள்ளாமல் திமிறி எழுங்கள். பல புதிய உயரங்கள் தேடி.” என்று குறிப்பிட்டுள்ளார்.