தென்னிந்திய சினிமாவில் ON-TIMEக்கு ஷூட் துவங்கும், ஆனால் பாலிவுட்... - ப்ரியாமணி | Priyamani
தமிழ் துவங்கில் பாலிவுட் வரை பல மொழிகளில் நடித்து வருபவர் ப்ரியாமணி. அடுத்தாக இவர் நடிப்பில் The Family Man 3வது சீசன் நவம்பர் 21ம் தேதி வெளியாகவுள்ளது. விஜய் நடித்துள்ள `ஜனநாயகன்' படத்திலும் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் பாலிவுட் பற்றியும், நடிகைகளின் சம்பளம் பற்றியும் தன கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
அந்தப் பேட்டியில் பாலிவுட் பணியாற்றும் விதம் தென்னிந்திய சினிமா பணியாற்றும் விதத்தில் இருந்து மாறுபட்டது என்ற ப்ரியாமணி "மொழியைத் தவிர்த்து, பாலிவுட்டுக்கும், தென்னிந்திய சினிமாவுக்கும் இடையில் பணியாற்றும் விதம் மாறுபட்டது. தெற்கில், வேலையை சொன்ன நேரத்திற்கு துவங்குவார்கள். காலை 7 அல்லது 8 மணிக்கு வேலை துவங்கிவிடும். நாங்கள் 8 மணி என சொன்னால், என்ன ஆனாலும் சரி 8 மணிக்கு துவங்கிவிவோம். ஆனால் இங்கு நான் கவனித்த வரையில், நீங்கள் 8 என்று சொல்லும்போது, அந்த நேரத்திற்கு தான் மக்கள் வரவே செய்வார்கள்." எனக் கூறினார்.
நடிகருக்கும் நடிகைக்குமான சம்பளத்தில் சமத்துவம் இல்லை என்பது பற்றி பேசியவர் "அது உண்மைதான். ஆனால் அது பரவாயில்லை. உங்கள் சந்தை மதிப்பு எதுவாக இருந்தாலும், நீங்கள் அதைக் கேளுங்கள், அதற்கான ஊதியம் உங்களுக்குக் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். என்னுடன் நடிக்கும் ஆண் நடிகரை விட எனக்குக் குறைவான சம்பளம் வழங்கப்பட்ட காலங்கள் உள்ளன. இருப்பினும், அது என்னைத் தொந்தரவு செய்யவில்லை. எனது சந்தை மதிப்பு மற்றும் எனது மதிப்பு எனக்குத் தெரியும். இது எனது கருத்து மற்றும் எனது அனுபவம். என் தகுதிக்கு ஏற்ற சம்பளத்தை நான் கேட்பேன். தேவையற்ற சம்பள உயர்வு கேட்க மாட்டேன்" என்றார்.

