`புதிய பாதை'யை மீண்டும் எடுக்கிறேன்! - சர்ப்ரைஸ் கொத்த பார்த்திபன் | Parthiban | Pudhea Paadhai
எஸ்.ஆர்.எம். பிரைம் மருத்துவமனையின் மேம்பட்ட ஆராய்ச்சியக தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் நடிகர் பார்த்திபன். இந்த நிகழ்வின் இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பல கேள்விகளுக்கு பதிலளித்தார். இதில் அடுத்தாக பார்த்திபன் பணியாற்றும் படங்கள் பற்றி கேட்கப்பட்டது.
அந்த கேள்விக்கு பதில் அளித்த பார்த்திபன் "பவன் கல்யாண் அவர்களுடன் `உஸ்தாத் பகத் சிங்' என ஒரு தெலுங்குப் படம் நடித்திருக்கிறேன். மலையாளத்திலும், கன்னடத்திலும் ஒரு படம் நடித்திருக்கிறேன். நான் இயக்கும் `நான் தான் சிஎம் 2026 onwards' படத்தை துவங்கி இருக்கிறேன். அதை ஏப்ரலில் எலெக்ஷனுக்கு முன்பு வெளியிட வேண்டும். அடுத்து என்னுடைய புதிய பாதையை நானே மீண்டும் எடுக்கிறேன். வழக்கமாக ரஜினி `பில்லா' படம் நடித்தால் அதை, அஜீத் ரீமேக் செய்வார். ஆனால் 89ல் வந்த என்னுடைய புதிய பாதை படத்தை, நானே நடித்து எடுக்கப் போகிறேன். அது என்னுடைய கனவுப்படம், பெரிய பொருட்செலவில் தயாராகும் படம்.
சமீபத்தில் மோகினி ஒரு பேட்டியில் பார்த்திபன் புத்திசாலித்தனத்திற்கு அவர் அடையவேண்டிய இடத்தை அடையவில்லை. அவர் சூப்பர்ஸ்டார் போல அகி இருக்க வேண்டியவர் என்று சொன்னார், அதைக் கேட்க மிக உணர்வுப்பூர்வமாக இருந்தது. ஆனால் இதுதான் என் பாதை என நானே வகுத்துக் கொண்டதுதான். `ஹவுஸ்ஃபுல்' போன்ற படம் எடுத்து தேசிய விருது வாங்குவதும், `குடைக்குள் மழை' `ஒத்த செருப்பு' போன்ற படங்கள் எடுத்தது நான் விரும்பி செய்ததே. அதில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால் இனிமேல் செய்யப்போவதில் மக்கள் விரும்பும் படங்கள் செய்யப் போகிறேன்" என்றார்.

