" 'கருப்பு' படத்தில் பணியாற்றுகிறேன் என ரஹ்மான் சாரிடம் சொன்னேன்!" - சாய் அப்யங்கர் | Sai Abhyankkar
சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள படம் `கருப்பு'. இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ், யோகிபாபு எனப் பலர் நடித்துள்ளனர். மே 14ஆம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் பேட்டி அளித்துள்ளார். அதில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணியாற்றியது குறித்தும், ’கருப்பு’ படத்தில் ரஹ்மான் விலகியபின் தான் இணைந்தது குறித்தும் பேசி உள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியபோது, "ஏ.ஆர்.ரஹ்மான் சாரிடம் இருந்து பொறுமையைத்தான் கற்றுக் கொண்டேன். எந்தச் சூழலிலும், எந்தப் பிரச்னை என்றாலும் அதை அவர் முகத்தில் காட்ட மாட்டார். 100 பிரச்னைகள் இருந்தாலும், மிக அமைதியாக இருப்பார், எங்களை உற்சாகப்படுத்துவார். அவரது பாடல்களுக்கு புரோக்ராமராக வேலை பார்த்திருக்கிறேன். குறிப்பாக `பத்து தல' படத்தில் ஓர் இசையில் வேலை செய்து கொண்டிருந்தபோது `யோவ் சூப்பரா இருக்குயா' எனச் சொல்லி சென்றார். நான் ஒரு 6 மாதங்கள் அதை நினைத்து `ரஹ்மான் சாரே சூப்பர்னு சொல்லிட்டார்' என பெருமை கொண்டேன். அவருடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நினைத்ததே இல்லை. ஆனால் அது நடந்தது. அவர் தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தினார்.
என்னுடைய குரு சந்தோஷ், மகேஷ் இருவரும் சூர்யா சார் படத்தில் நீ பணியாற்றப் போகிறாய் எனக் கூறினார்கள். அப்படத்தின் விவரங்களைப் பார்த்தபோது, அதில் ரஹ்மான் சார் பெயர் இருந்தது. அவர் விலகியது குறித்து எனக்கு தெளிவான பதில் எதுவும் கிடைக்கவில்லை.
ஆனால், அப்படத்தின் குழு சூர்யா சார், ஆர்.ஜே.பாலாஜி போன்றோர் நான் பணியாற்ற வேண்டும் என விரும்புகிறார்கள் எனில் அதைச் செய்வது என்னுடைய கடமை. அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் பணியாற்ற நினைத்தேன். இதுகுறித்து ரஹ்மான் சாரிடமும் பேசினேன். அவருக்கும் இதில் நான் பணியாற்றுவதில் மகிழ்ச்சியே" என்றார்.

