"பாக்யராஜ் சாரை கடைசியாக அன்று தான் பார்த்தேன்..." - கணேஷ் கே பாபு | Ganesh K Babu | K Bhagyaraj
கல்யாண் ஜெகன் இயக்கத்தில் அஜய் கார்த்தி, அஞ்சனா நேத்ரன், நடராஜ், கே பாக்யராஜ் நடித்துள்ள படம் `டார்க்'. இப்படம் ஜூலை 3ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் நேற்று மாலை படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்நிலையில் பேசிய இப்படத்தின் கதாசிரியரும், `டாடா' பட இயக்குநருமான கணேஷ் கே பாபு "டார்க் என்னுடைய கதையில் உருவான படம். இது ஒரு ஹாரர் படம். பேய் இருக்கு, பேய் இல்லை என்ற இரு நம்பிக்கைகள் சம்பந்தப்பட்டதாக உருவாகி இருக்கிறது. இது நல்ல தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் கொடுக்கும் படமாக இருக்கும். இது தனுஷ் சாருக்காக நான் யோசித்த கதை. ஒரு பேய் படத்தில் தனுஷ் சார் நடித்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து வந்த லைன்.
பாக்யராஜ் சார் கடைசியாக நடித்த ஒரு சில படங்களில் இதுவும் ஒன்று. போன வெள்ளிக்கிழமை வரை தொடர்பில் இருந்தவர் திடீரென இல்லை என்பது வருத்தம். `டாடா' படத்தில் அவருடன் பணிபுரிந்த போது, முதலில் அவருக்கு வசனமே இல்லை. அடுத்த காட்சியில் வசனம் இருக்கிறது என்று சொல்லி நான் எழுதியவற்றை கொடுக்க சென்றேன். அவருடைய கேரவனில் அவர் ஒரு வெர்ஷன் வசனம் எழுதி வைத்திருந்தார். அது வேண்டாம் என சொல்லியும், அந்த வசனத்தை பேசி நடித்தார், அது மிக சரியாக இருந்தது.
ஒரு இயக்குநராக நான் எவ்வளவு முட்டாள் என்பதை அது காட்டியது. அதிலிருந்து அவருக்கு வசனம் நான் கொடுப்பதை நிறுத்திவிட்டேன். அவரது மரணம் ஏன் அவ்வளவு அதிர்ச்சியாக இருக்கிறது என்றால், சில பேருக்கு இப்படி நடக்கும் என நாம் எதிர்பார்க்க மாட்டோம். டாடா படத்தில் அவருக்கு எதுவும் செய்யவில்லை என உறுத்தியது. டார்க் பட சமயத்தில் அவருடைய செருப்பால் கால் வலி வந்தது என்றார். உடனடியாக பக்கத்தில் உள்ள கடைக்கு சென்று செருப்பை வாங்கி வந்தோம். என் கையால் அவருக்கு அதனை போட்டுவிட்டேன். அதுதான் அவரை நான் கடைசியாக பார்த்ததும் கூட அவருக்கான சமர்ப்பணமாக இந்தப் படத்தை கொடுக்கிறோம்." என்றார்.

