"Dude கதைக்கு நோ சொன்னேன்!" - காரணம் சொன்ன பிரதீப்| Pradeep Ranganathan
பிரதீப் ரங்கநாதன் - மமிதா பைஜூ நடிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்ள திரைப்படம் `ட்யூட்'. இப்படம் தீபாவளி வெளியீடாக அக்டோபர் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் மியூசிக் கன்சர்ட் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பேசிய நடிகர் பிரதீப் ரங்கநாதன் "உங்களில் ஒருவனை இங்கு நிற்க வைத்ததற்கு நன்றி. சரத்குமார் சார், என்னுடைய போன படத்தில் அர்ஜூனா அர்ஜூனா பாடலை பயன்படுத்த அனுமதித்ததற்கு நன்றி. உங்களுடன் சேர்ந்து நடிப்பேன் என நினைக்கவில்லை. சாரின் உண்மையான வயது என்ன என்று அவரிடம் கேட்டு ஷாக் ஆகிவிட்டேன். என்ன சார் சீக்ரெட் என்றேன். காலையில் பீட்ரூட் ஜூஸ் குடிப்பேன் என சொன்னார். நானும் இப்போது பீட்ரூட் ஜூஸ் குடிக்கிறேன். அவருடைய வயதை நான் எட்டும் போது இளமையாக இருந்தால் மகிழ்ச்சி.
மமிதாவை ஒரு குறும்படத்தில் பார்த்தேன். லவ்டுடே படத்தில் அவரை நடிக்க வைக்க கேட்டோம். அப்போது அவர் வணங்கான் படத்தில் நடிப்பதாக இருந்தது. பிசியாக இருந்தார். இந்தப் படத்தில் மமிதா இருக்கிறார் என கீர்த்தி சொன்னதும் சந்தோஷமாக இருந்தது. இது மிகவும் வலிமையான கதாபாத்திரம். காமெடி செய்யும், எமோஷனலாகும். நீங்கள் இதுவரை பார்க்காத மமிதாவை பார்க்க போகிறீர்கள். அற்புதமான நடிகை.
நான் பரிதாபங்கள் சேனலின் பெரிய ஃபேன். ஒவ்வொரு படம் ஆரம்பிக்கும் போதும் அவர்களுக்கு போன் செய்து, இதில் பணியாற்றலாமா எனக் கேட்பேன். இந்தப் படத்தில் டிராவிட் உடன் நடித்தது மிகவும் சந்தோசம். ஒரு புது நண்பன் கிடைத்துவிட்டான் என தோன்றியது.
லவ் டுடே வுக்கு பிறகு நிறைய கதைகள் வந்தது. எனக்கு கதை சுருக்கத்தை மெயிலில் அனுப்ப சொல்வேன். அப்படிதான் ட்யூட் பட கதை சுருக்கம் வந்தது. படித்தேன் நன்றாக இருந்தது. ஆனால் மீண்டும் ஒரு காதல் கதையில் நடிக்க வேண்டுமா என யோசித்தேன். எனவே வேண்டாம் எனக் கூறிவிட்டேன். பிறகு பல முறை கீர்த்தின்னு ஒரு பையன் உங்களிடம் கதை சொல்ல வேண்டுமாம் என பலரிடம் இருந்து போன் வரும். அதன் பிறகு மைத்திரியின் ரவி சாரும் அழைத்து இதையே கூறினார். சரி நாம் கதை கேட்கலாம் என கீர்த்தியை சந்தித்தேன். லவ் டுடே பார்த்து உங்கள் நடிப்பு பிடித்தது. எனவே என் கதையை உங்களுக்கு ஏற்றது போல மாற்றினேன் என கூறினார். பின்பு கதையை கூறினார், பிடித்தது. ஆனாலும் எனக்குள் அந்த குழப்பம் இருந்து கொண்டே இருந்தது.
ஆறு மாதங்கள் ஆனது. ஆனாலும் அந்தக் கதை மனதை விட்டு நீங்கவில்லை. மீண்டும் கீர்த்தியை சந்தித்து கேட்டேன். அவர் வேறு ஹீரோ கிடைக்க தாமதம் ஆகும் என்ற சூழல் எனவே என்னை வைத்து துவங்கலாம் என்கிறார். ஆனாலும் எனக்கு சில சந்தேகங்கள் இருந்தது, அப்போது கீர்த்தி ப்ரோ என்ன நம்புங்க என்றார். கோமாளி சமயத்தில் என்னைப் பார்த்தது போலவே இருந்தது. படப்பிடிப்பில் அவரை பார்த்த போதுதான் அவர் உழைப்பு புரிந்தது. ஒரு பெரிய இயக்குநர் தமிழ் சினிமாவுக்கு வரப்போகிறார்.
சாய் அப்யங்கரின் கட்சி சேர என்ற ஒரு பாடல் ட்ரெண்ட் ஆனது. அவரோடு பணியாற்றலாம் என கீர்த்தியிடம் சொன்னேன். அவர் போய் சாயை சந்தித்துவிட்டு வந்து, ஆச கூடனு ஒரு பாட்டு வெச்சிருக்கார் ரொம்ப சூப்பர் என சொன்னார். அந்தப் பாட்டு வந்து ஹிட்டானதும், அமுக்குங்கடா அவன எனப் பார்த்தால் வரிசையில் 8 இயக்குநர்கள் இருந்தார்கள். பெரிய ஆளாக வர போகிறார் சாய்.
இந்தப் படம் ஒரு தீபாவளி படம். இதில் ஒரு அழுத்தமான கருத்து இருக்கிறது. மற்றவர்கள் சந்தோஷத்தை பார்த்து சந்தோஷப்படுபவன் தான் இந்த டியூட். என் ரசிகர்களுக்கு நன்றி." என்றார்.