கோடிகள் தருவதாக சொல்லியும், குளிர்பான விளம்பரத்தை மறுத்தேன்! - ஜி வி பிரகாஷ் | G V Prakash
சென்னையில் புதிதாக துவங்கப்பட்டுள்ள வொண்டர்லா பொழுது போக்கு பூங்காவில் புதிதாக Skywheel என்ற புது ரெய்டை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அதற்கான அறிமுக நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர், நடிகர் ஜி வி பிரகாஷ் கலந்து கொண்டார். இதில் ஜி வி பிரகாஷிடம், வணிக விஷயங்களை ஆதரிப்பது குறித்து பிரபலங்கள் பலரும் கட்டுப்பாடுகள் வைத்திருக்கிறார்கள். அது குறித்து உங்கள் பார்வை என்ன எனக் கேட்கப்பட்டது.
அதற்கு பதில் சொன்ன ஜி வி பிரகாஷ் "நான் எல்லா விளம்பரங்களையும் நான் ஊக்குவிப்பதில்லை. குறிப்பாக ஆல்கஹால் சம்பந்தப்பட்ட விஷயங்களையோ, சூதாட்டம் தொடர்பானவற்றையோ ஆதரித்தது இல்லை. குளிர்பான விளம்பரங்களை வாய்ப்பு வந்த போது, அவர்கள் கோடிகள் கொடுக்க தயாராக இருந்த போது கூட நான் ஏற்கவில்லை. Amusement Park என்பது குடும்பத்தோடு வந்து சந்தோஷமாக இருக்கும் இடம் என்பதால் அதற்காக வந்திருக்கிறேன்." என்றார்.
தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் எனக் கேட்டதும் "என்னுடைய கருத்தா... எப்படியும் 4ம் தேதி தெரிந்துவிடும், அதுவரை காத்திருங்கள். நானும் உங்களை போலவே வாக்களித்திருக்கிறேன். என்ன வரப்போகிறது என எனக்கும் தெரியாது. மக்கள் என்ன முடிவு எடுத்திருக்கிறார்களோ அது தான். நிறைய கருத்துக்கள் இருக்கலாம், ஆனால் தேர்தல் முடிவுகள் வரும் போது நமக்கு அதிர்ச்சியாக கூட இருக்கலாம். இப்படித்தான், அப்படித்தான் என எதுவுமே சொல்லமுடியாது. ரிசல்ட் வந்தால் தான் தெரியும்" என்றார் ஜி வி பிரகாஷ்.

