"பரியேறும் பெருமாள் படம் மிஸ் ஆனது..." - Anupama Parameswaran | Rajisha Vijayan | Bison
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ், அனுபமா, ரஜிஷா, பசுபதி எனப் பலரும் நடித்து உருவாகி இருக்கிறது `பைசன்'. தீபாவளி வெளியீடாக அக்டோபர் 17ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இதன் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய ரஜிஷா விஜயன் "கர்ணனில் நடிக்க என்னை மாரி சார் அழைத்த போது, மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஏனென்றால் பரியேறும் பெருமாள் பார்த்து அவருக்கு ரசிகையாகி இருந்தேன். அதற்கு பிறகு அவர் இரண்டு படங்கள் செய்தார். ஏன் அதில் என்னை நடிக்க அழைக்கவில்லை என கேட்டேன். அவை உனக்கு பொருத்தமாக இருக்காது எனக் கூறினார். திடீரென ஒரு நாள் எனக்கு போன் செய்தார் மாரி. நான் ஒரு படம் செய்கிறேன் எனக் கூறிய போதே, என்னை நடிக்க வைக்கப் போகிறார் என எனக்கு தெரிந்துவிட்டது. ஆனால் அவர் குரலில் ஒரு சந்தேகம் இருந்தது, நான் நடிப்பேனா? மாட்டேனா? என அவருக்கு ஒரு குழப்பம்.
அக்கா கதாபாத்திரம்தான் எனக் கூறினார். சார் எதுவாக இருந்தாலும் நான் செய்கிறேன் எனக் கூறினேன். வெறும் நம்பிக்கையின் பேரில்தான் இதில் நடித்தேன். ஒருநாள் பைசன் படப்பிடிப்பில், தண்ணிக்குள் குதிக்க வேண்டும் எனக்கு நீச்சல் வருமா என்றார். கர்ணனுக்காக நீச்சல் கற்றுக் கொண்டேன். ஆனால் நான்கு வருடம் ஆகிவிட்டது என யோசித்தேன். ஆனாலும் குதித்து நான் முழுகிவிட்டேன். என்னைக் காப்பாற்ற மாரி சார் குதித்து வந்தார். இது போல் பல சம்பவங்கள் இருக்கிறது. பைசன் மிக முக்கியமான படமாக உருவாகி இருக்கிறது" என்றார்.
அவரை தொடர்ந்து பேசிய அனுபமா பரமேஸ்வரன், "சில வருடங்களுக்கு முன்பு பரியேறும் பெருமாளில் நடிக்க ரஞ்சித் சார் போனில் அழைத்தார். அதன் பிறகு மாரி சாரிடம் பேசினேன். ஆனால் தேதிகள் ஒத்துவராததால் என்னால் அதில் நடிக்க முடியவில்லை. அதை பற்றி யோசித்து வருத்தப்பட்டேன். ஆனால் அதன் பின்பு என்னை நீங்கள் அழைப்பீர்கள் என நினைக்கவே இல்லை. ஆனால் பைசனுக்காக என்னை அழைத்தார்கள். என் முதல் படமான பிரேமம் படத்தின் போது எப்படி உணர்ந்தேனோ, அப்படிதான் பைசனில் உணர்ந்தேன். பைசனுக்கு முன்பான அனுபமா வேறு, பைசனுக்கு பிறகான அனுபமா வேறு. ஒரு நடிகையாக நிறைய மாறியிருக்கிறேன்" என்றார்.